"எங்கள் இருவருக்குமான பிரச்சனை அண்ணன் தங்கை பிரச்சனை தான்" தமிழிசை விளக்கம்!

"எங்கள் இருவருக்குமான பிரச்சனை அண்ணன் தங்கை பிரச்சனை தான்" தமிழிசை விளக்கம்!

பாண்டிச்சேரியில் முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் எதுவும் இல்லை எங்கள் இருவருக்குமான பிரச்சனை அண்ணன் தங்கை பிரச்சனை தான் என நெல்லையில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித் திருவிழா ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருநெல்வேலி வருகை தந்திருந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதி சுவாமி நெல்லையப்பர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மக்களோடு கூட்டமாக கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. கொரோனா என்ற பெரும் பேரிடர் மக்களிடம் இருந்து அகற்றப்படுவதற்கு பெரு ஆயுதமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி மிகவும் உதவிகரமாக இருந்தது.  13 ஆண்டுகளுக்கு பிறகு பாண்டிச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாண்டிச்சேரிக்கு கடந்த ஆண்டுகளை விட 2000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திடடம் தமிழ்நாட்டில் வெறும் அறிவிப்பாகவே உள்ளது என விமர்சித்த அவர்,  65,000 பெண்களுக்கு பாண்டிச்சேரி மாநிலத்தில் மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் இவையெல்லாம் ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து பணியாற்றுவதால்தான் நடைபெற்று வருவதாக கூறினார். 

தொடர்ந்து, கரோனா நெருக்கடி காலத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியிருக்கலாம் எனக்கூறிய அவர்,  நீதிமன்றத்தில் பணி நியமான ஆணை தொடர்பாக தடை ஆணைகளும் வழிகாட்டுதல்களும் உள்ள காரணத்தினால் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாத சூழல் இருந்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், பாண்டிச்சேரி முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் எதுவும் இல்லை எங்கள் இருவருக்குமான பிரச்சனை அண்ணன் தங்கை பிரச்சனை தான் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:தேனி தேர்தல் வழக்கு; குற்றச்சாட்டுகளை மறுத்த ஓ.பி.ரவீந்திரநாத்!