“ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் சென்றடைய வேண்டும்” - தயாநிதி மாறன்

“ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து செயல்படுத்தி வரும் திட்டங்கள்  சென்றடைய வேண்டும்” -  தயாநிதி மாறன்

மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் மக்களை சென்றடைய வேண்டும் என  திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். 

சென்னை ரிப்பன் கட்டட வளாகம் அம்மா மாளிகையில் சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதில், சென்னை மாவட்ட வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  மேலும் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், மக்கள் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு அளிக்கின்ற நிதி குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தின் போது மேடையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,  “தொடர்ந்து  சென்னையில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீர் அகற்ற வசதி, மருத்துவ வசதி, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என  திட்டமிட்டு இருக்கிறோம். இதில் ஒன்றிய அரசு தனது பங்களிப்பை மாநில அரசோடு சேர்ந்து செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கப்பட வேண்டும் என்பதற்குத்தான் இந்த ஆலோசனைக் கூட்டம்”, எனக் கூறினார். 

இங்கு வருகை தந்திருக்க கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவரவர் தொகுதியில் நடைபெற்று வருகிற பணிகள் குறித்த குறிப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவரவர் சட்டமன்ற தொகுதிகளில் என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது,  அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,  எந்த நிலையில் அந்த திட்டம் நிலுவையில் உள்ளது என்பதும் தெளிவாக அதில் உள்ளது எனக் கூறினார். மேலும், அந்த கூட்டத்தில், அதிகாரிகளின் விளக்கங்களும் ஆலோசனைகளும்  கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுவின் தலைவரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில், மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் வேலு,  சுதர்சனம், அசன் மவுலானா, எபினேசர், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதையும் படிக்க   | " 33 % மகளிர் இட ஒதுக்கீடு கானல் நீர் போன்றது" - கி.வீரமணி