ஊராட்சி மன்ற கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து...! முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு கோரிக்கை...!

திருத்தணி அருகே பூனிமாங்காடு ஊராட்சி மன்ற கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அலுவலக பணியில் இருந்த ஊராட்சி செயலாளர், தூய்மை பணியாளர்கள், அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்

ஊராட்சி மன்ற கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து...! முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு கோரிக்கை...!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, திருவலாங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு ஊராட்சியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த கிராமத்தில்  30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அரசு கட்டிடம் அந்த பகுதியில் உள்ளது. அந்த அலுவலகம் கோவில் இடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அலுவலகத்தில் கொரோனோ தடுப்பூசி மெகா முகாம் நடைபெற்றது. அலுவலகத்தில் பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர், பஞ்சாயத்து தலைவர், 100 நாள் பணி மேற்கொள்ளும் பணி பொறுப்பாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் அந்த கட்டிடத்திற்குள் பணியில் இருந்துள்ளனர். அப்போது திடீரென ஐந்துக்கும் மேற்பட்ட இடத்தில் கட்டிடத்தில் இருந்து மேற்கூரை இடிந்து விழுந்து உள்ளது.,

இதனால் கட்டிடத்திற்கு உள்ளே இருந்த அனைவரும் பயந்து வெளியே ஓடி வந்துள்ளனர். கட்டடத்தின் உள்ளே 70% மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் ஊராட்சி மன்ற கட்டிடத்திற்குள் மின்சாரமும் பாய்ந்துள்ளது.

இதனால் வெளியே ஓடி வந்த ஊராட்சி செயலாளர் மற்றும் பஞ்சாயத்து தலைவர் அந்த பகுதியிலிருந்து மின்மாற்றி மூலமாக வந்த மின்சாரத்தை நிறுத்தினர். இதனால் அதிர்ஷ்டவசமாக 10க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர். இந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது என இந்த ஊராட்சி மன்ற தலைவர், கிராம மக்கள் என அனைவரும் பலமுறை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர். மேலும், மாற்று கட்டடம் கட்ட வேண்டும் என்றும் மனு அளித்திருந்த நிலையில்இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. 

 இந்த சம்பவத்தால் அந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற கட்டிடம் முன்பு கூடியதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு இதே ஊராட்சியில் பழமையான அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இந்த பகுதிகளில் உள்ள  பழமையான அரசு கட்டடங்கள் மறு ஆய்வு செய்து மாற்று கட்டடம் கட்ட வேண்டும் என்றும், இது போன்ற சம்பவத்தால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.