தி.மு.க.வில்  மேலும் ஒரு அரசியல் வாரிசு... அரசியலில் இறங்கினாரா அமைச்சர்  நேருவின் மகன்..?

அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு தனது பிறந்த நாளில் அரசியலில் களமிறங்கியிருக்கிறார்.

தி.மு.க.வில்  மேலும் ஒரு அரசியல் வாரிசு... அரசியலில் இறங்கினாரா அமைச்சர்  நேருவின் மகன்..?

திமுகவில் தலைமையில் மட்டுமல்லாமல் மாவட்டங்களிலும் வாரிசு அரசியல் செல்வாக்கு காணப்படுகிறது என்பது திமுக விமர்ச்கர்களும் எதிர்க்கட்சிகளும் முதன்மையாக வைக்கிற விமர்சனமாக இருக்கிறது.

இந்த சூழலில்தான், திருச்சி திமுகவில் மற்றொரு வாரிசு ஆளுமை தனது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடி அதகளமாக களமிறங்கியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, திமுகவின் முதன்மைச் செயலாளரும் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேருதான் அந்த வாரிசு. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கே.என். நேரு திருச்சி மாவட்டத் திமுகவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தனி செல்வாக்குடன் இருந்து வருகிறார்.

திருச்சியில் கருணாநிதி காலத்தில் கோலோச்சியவர் அன்பில் தர்மலிங்கம், திமுகவில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளராக இருந்தார். அவருடைய மகன் அன்பில் பொய்யாமொழி மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருந்தார். பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் மு.க.ஸ்டாலினுடைய மகன் உதயநிதிக்கு நெருக்கமானவராக இருக்கிறார். மகள் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று உதயநிதியின் அரசியல் வெற்றிக்கு துணையாக குரல் கொடுத்து வருகிறார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து வந்த கே.என்.நேரு திமுகவின் முக்கிய தலைவராக உருவெடுத்தார். மாநாடு பொதுக்கூட்டம் என்று சொன்னால் இன்றைக்கும் ஏற்பாடுகளில் கே.என். நேருவை அடித்துக்கொள்ள யாரும் இல்லை. ஆனால், திருச்சி மாவட்ட 3 ஆகப் பிரிக்கப்பட்ட பின்னர், சீனியர் என்ற முறையில் கே.என்.நேரு திமுகவின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். கே.என்.நேருவுக்கு பிறகு, திருச்சியில் இன்னொரு முகம் தேவை என்ற நோக்கத்தில் திருச்சியில் அன்பில் மகேஷும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்.

பத்தாண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் கே.என்.நேரு அமைச்சரானார். அதே நேரத்தில், அன்பில் மகேஷுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனால், திருச்சியில் கே.என். நேருவுக்கு அடுத்து திமுகவின் முகம் அன்பில் மகேஷ் என்பதாகவே பேசப்பட்டது.

இந்த சூழ்நிலையில்தான், அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு தனது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடி திருச்சி திமுகவில் தனது வருகையை அறிவித்து அதகளப்படுத்தியிருக்கிறார். இதனால், கே.என். நேருவின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என். நேருவுக்கு பிறகு திருச்சி திமுகவின் முகம் அருண் நேருதான் என்று தெரிவிக்கின்றனர். கே.என். நேருவின் சம்மதத்துடன்தான் அருண் நேரு களமிறங்கியிருக்கிறார் என்கிறார்கள்.

இதனால், கே.என். நேருவுக்கு பிறகு திருச்சியில் அன்பில் மகேஷ் கைதான் ஓங்கும் என்று நினைத்திருந்த அவருடைய ஆதரவு வட்டம் சற்று ஆடிப்போயிருப்பதாகவே தெரிகிறது. அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு திமுகவில் முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்கியதையடுத்து அவருடைய பிறந்தநாளை நேற்று திமுகவினரும் கே.என்.நேருவின் ஆதரவாளர்களும் சேர்ந்து கோலாகலமாக கொண்டாடினர். அருண் நேருவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக திருச்சி முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் திருச்சி முழுவதும் திமுகவின் பாணியில் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டி அதகளப்படுத்தினர்.