8 வது நாள்: தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது...!

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வி வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்களும் டிபிஐ வளாகத்தில் போராட்ட நடத்தி்னர்.

தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மயக்கம் உள்ளிட்ட உடல் நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்த பின்னரும் போராட்டத்தில் பங்கெடுத்து வந்தனர்.  ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவு கொண்டு வரவேண்டும் என அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். 

இதையடுத்து அரசு தரப்பு பல முறை ஆசிரியர்களுடன் பேச்சுவாரத்தை நடத்தியது. எனினும் சுமூக உடன்பாடு ஏற்படாததால் இரவு பகலாக ஆசிரியர்கள் 8 வது  நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்களும் பகுதி நேர ஆசிரியர்களும் கூறினர்.

இதையும் படிக்க : அமைச்சர் பேச்சில் திருப்தி அளிக்கவில்லை; தங்களது போராட்டம் தொடரும் ; ஆசிரியர் சங்கத்தினர் அதிரடி!

இந்த போராட்டம் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை டிபிஐ வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உண்ணாவிரதம் மேற்கொண்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே கைதாக மறுத்து தர்ணாவில் ஈடுபட்ட  ஆசிரியர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று பேருந்தில் ஏற்றி சென்றனர். அப்போது  போலீசாருக்கு  எதிராகவும், அரசுக்கு எதிராகவும் ஆசிரியர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது. 

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் 10 க்கும் மேற்பட்ட  பேருந்துகளில்  அழைத்து  செல்லப்பட்டு புதுப்பேட்டை சமூக நலக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.