புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள் சங்கத்தினர்...!

மளிகை கடையை அடித்து நொறுக்கிய போதை ஆசாமி மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சங்கத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட  வியாபாரிகள் சங்கத்தினர்...!

திருவள்ளூர் மாவட்டம், கூடப்பாக்கம் கலெக்டர் நகர் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் தேவராஜ்(52). இவரது  கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் வந்த நபர் ஒருவர் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். கடையின் உரிமையாளர் பணம் தர மறுக்கவே, கஞ்சா போதையில் கற்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடையின் கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு கடையில் இருந்த ஒரு சில பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட நபர், வெள்ளவேடு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார். இந்நிலையில், புகார் அளித்து ஒரு வார காலமாகியும் இதுவரை அந்த போதை ஆசாமி மீது நடவடிக்கை எடுக்காததால் வியாபாரிகள் சங்கத்தினர், சுமார் 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து வியாபாரிகள் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் ஒட்டுமொத்த வியாபாரிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.