ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்... நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்...

திண்டிவனம் அருகே கல்லூரி வளாகத்தின் உள்ளே செல்லும் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 

ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்... நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்...

திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பத்தில் தனியார்  கலை, அறிவியல், பொறியியல் மற்றும் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது.

இக்கல்லூரிகளில் பல்வேறு பகுதியிலிருந்து மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரியில் தங்கும் விடுதிகள் உள்ளதால் பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து வரும் மாணவ மாணவிகள் கல்லூரியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக கல்லூரி விடுதியில் இருந்த மாணவ மாணவிகள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், ஒரு சில மாணவர்கள் மட்டும் விடுதியில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று கல்லூரி விடுதியில் தங்கியிருந்த திருக்கோவிலூர் அடுத்த பழவனூர் கிராமத்தை சேர்ந்த காத்தவராயன் மகன் ஜெயக்குமார்(21), மற்றும் பெரம்பலூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் சூர்யா(21), ஆகிய இருவரும்  கல்லூரி வளாகத்தில் உள்ள ஓங்கூர் ஆற்றில் அப்பகுதியில் உள்ள பாலத்தின் மீது இருந்து குதித்து குளித்துள்ளனர்.

அப்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் இரண்டு மாணவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் சூர்யா என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கரைக்கு திரும்பினார்.  

ஜெயக்குமார் என்ற மாணவன் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து மாணவர்கள் ஒலக்கூர் காவல் நிலையம் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காணாமல் போன மாணவனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் பல மணி நேரம் தேடுதலுக்கு பிறகு 300 மீட்டருக்கு அப்பால் உயிரிழந்த நிலையில் ஜெயக்குமாரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதுகுறித்து ஒலக்கூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.