தென்மேற்கு அரபிக் கடலில் ''தேஜ்'' புயல்!

தென்மேற்கு அரபிக் கடலில் ''தேஜ்'' புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயல் சின்னமாக வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து வரும் 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த புயலானது வருகிற 25-ஆம் தேதி அதிகாலை ஏமனுக்கும்- ஓமன் கடற்கரைக்கும் இடையே கரையை கடக்கும் என தெரிவிள்ளனர். மேலும் வட இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த பெயரான தேஜ் என்ற பெயர் வைத்துள்ளனர். 

தேஜ் புயலினால் தமிழ்நாடு ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், இது குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், வடகிழக்கு பருவமழை நாளைய தினம் தொடங்கும் எனவும், வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும் எனவும் கூறியுள்ளனர். 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால்,  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது