"மதுக்கடையில் வியாபாரம் அதிகமானால் பெருமை இல்லை" அமைச்சர் முத்துசாமி விளக்கம்! 

"மதுக்கடையில் வியாபாரம் அதிகமானால் பெருமை இல்லை" அமைச்சர் முத்துசாமி விளக்கம்! 

மதுக்கடையில் வியாபாரம் அதிகமானால் பெருமை இல்லை அது குறையவேண்டும் என்றே நினைக்கிறோம் என மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 

தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சு.முத்துசாமி, மதுக் கடையில் தவறுகள் நடக்கிறது என்று எதிர்கட்சிகள் புகார் தெரிவிப்பது சாதாரணமான விசயம் தான் எனவும், அவர்கள் அப்படி கூறாமல் இருந்தால் தான் அதிசயம் என தெரிவித்த அவர் சில இடத்தில் நடந்துள்ள தவறுகளை அனைத்து இடங்களிலும் நடந்துள்ளதாக சித்தரிக்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், இது குறித்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர் டாஸ்மாக் கடையில் வியாபாரத்தை கூட்ட செல்லவில்லை எனவும் தவிர அங்குள்ள கஷ்டத்தை பார்க்க நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் குறிபிட்டார். மது விற்பனை நேரம் குறைப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மதுக்கடையில் வியாபாரம் அதிகமானால் பெருமை இல்லை எனவும் அது குறையவேண்டும் என்றே நினைப்பதாகவும் தெரிவித்தார்.

மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது அபராதம், பணிமாறுதல் செய்யப்படுவதாகவும் அதிக புகார் வந்தால் அந்த நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.  மதுக்கடை பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிகாரிகளுடனும் டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளதாகவும் விரைவில் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தற்போது 500 மது கடைகளை மூடி உள்ளதாகவும், பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த கடைகள் மூடப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இது குறித்து கடந்த ஏப்ரல் மாதமே முடிவெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க:ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் வழங்கிய கமலஹாசன்!