பணி நிரந்தரம் வேண்டி...தலைமைச் செயலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்!

பணி நிரந்தரம் வேண்டி...தலைமைச் செயலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தலைமைச் செயலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகள் மற்றும் மற்ற அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், ஓய்வூதியம் வழங்க கோரியும் தலைமைச் செயலகம் எதிரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 1985 மற்றும் 87 காலகட்டங்களில் வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் நேரடியாக பகுதிநேர, தினக்கூலி அடிப்படையில் பணிக்கு சேர்ந்தவர்களை 10 ஆண்டுகள் கழித்து முறையான கால முறை ஊதிய விகிதத்தில் நியமனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, பகுதி நேர மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்து கடந்த 09/05/12ம் ஆண்டு 614 நபர்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டது.

இதையும் படிக்க : நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

அப்படி அரசாணை வெளியிடப்பட்ட 614 நபர்களில் பெரும்பான்மையான நபர்களுக்கு பலன்கள் கிடைத்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பெயருக்கு பணப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கவில்லை என்றும், இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை  காணவில்லை என்று கூறும் அதிகாரிகளை கண்டித்தும் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

அப்போது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக சொற்ப ஊதியத்தில் பணிபுரிந்து பலர் ஓய்வு பெற்று விட்டதாகவும், சிலர் பணியில் நீடித்து வருவதாகவும், அவர்களுக்கு உரிய பலனை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்றும், அப்படி வழங்கப்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.