“கானல்நீர் போன்ற இந்த.....” இபிஎஸ் கருத்து!!!

“கானல்நீர் போன்ற இந்த.....” இபிஎஸ் கருத்து!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்கள் இடம் பெறவில்லை என எதிர்க்கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் விமர்சித்துள்ளனர். 

கானல் நீர்:

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, திமுக அரசு அந்தர் பல்டி அடித்துள்ளதாக விமர்சித்துள்ளார்.   கானல் நீர் போன்ற இந்த பட்ஜெட், மக்களின் தாகத்தை தீர்க்காது என்றும், மக்களை முற்றிலும் ஏமாற்றும் பட்ஜெட் இது எனவும் குற்றஞ்சாட்டி உள்ளார். 

ஞாபகத்தில்:

தமிழ்நாடு அரசின் 2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவிற்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.  

சோளப்பொறி:

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 'யானை பசிக்கு சோளப்பொறி' வழங்கும் பட்ஜெட்டாகவே உள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, பெட்ரோல், டீசல் வரி குறைப்பு,  நதிகள் இணைப்பு, ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். 

ஓய்வூதியம்:

இதேபோல், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள நான்கரை லட்சம் அரசு பணியிடங்களை நிரப்புவது குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.  மேலும், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறாதது அவர்களை கவலையடைய செய்துள்ளதாகவும்  ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க:   பட்ஜெட்2023:  15 முக்கிய அறிவிப்புகள்...!!