”இதற்காகத்தான் புதிய கல்விக்கொள்கை வேண்டும் என்கிறோம்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

”இதற்காகத்தான் புதிய கல்விக்கொள்கை வேண்டும் என்கிறோம்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

மீன்வளத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை இளைய சமுதாயம் உருவாக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள  தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வளாகத்தில்,தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா இன்று  நடைபெற்றது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  தலைமை ஏற்று  பட்டங்களை வழங்கினார்.

 மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, தகவல் மற்றும் ஒலிப்பரப்புத்துறை இணை அமைச்சர், எல். முருகன்முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினர்.  தமிழ்நாடு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்  அனிதா  ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய  மத்திய இணைஅமைச்சர் L.முருகன் :-

அதிக புரோட்டீன் உள்ள உணவு மீன் உணவுகள் தான். இந்தியாவில் 2.8 கோடி பேர் மீன்வளம் சார்ந்த தொழிலில் உள்ளனர். உலகளவிலான மீன் உணவுத் தேவையில் 8% -ஐ இந்தியா பூர்த்தி செய்கிறது. மீன் வள துறை ஏற்று மதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நமக்கு போட்டியாக ஈக்குவாடர் என்ற சிறிய  நாடு உள்ளது.

நம் பிரதமரின் எண்ணப்படி நம் உற்பத்தி பல நாடுகளுக்கு செல்லவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, வளர்ந்த நாடுகளுக்கு அதிகளவில் மீன் வள ஏற்றுமதியை நாம் செய்துவருகிறோம். இந்தியாவில் மனித வளம்  சிறப்பாக இருப்பதால் தான் பல நாடுகளிலும் நாம் சிறப்பான பதவிகளை பிடித்து வருகிறோம். இதற்காகத்தான் புதிய கல்விக்கொள்கை வேண்டும் என்கிறோம். 

தமிழ்நாட்டில் மட்டும் மீன்வளத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 2,600 கோடி முதலீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெறுகிறது. இந்தியாவில் 2014 -ம் ஆண்டுக்கு பிறகு மீன் வள துறையில் 38, 500 கோடி முதலீட்டு செய்யப்பட்டுள்ளது

1950 முதல் 2014 வரை  55.79 லட்சம் கோடி டன் மீன்வள பொருட்கள் கையாளப்பட்டுள்ளது.2014 க்கு பிறகு 162.48 லட்சம் கோடி டன் மீன்வள பொருட்கள் கையாளப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்குள் 174 லட்சம் கோடி டன் மீன்வள பொருட்கள் கையாளப்பட இலக்கு.2025 க்குள் மீன் வள  ஏற்றுமதியில் 1 லட்சம் கோடியை தொட இலக்கு.2014 க்கு பிறகு மீன் வளத்துறையில் 400  புத்தொழில் நிறுவனங்கள் உருவாகி உள்ளன." எனக் குறிப்பிட்டார். 

அதோடு, மீன்வளத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளையும் புதிய தொழில்களையும் இளைய சமுதாயம் உருவாக்க வேண்டும்",  என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிக்க    | மேகதாது அணை கட்ட துரித நடவடிக்கை; சித்தராமையா அறிவிப்பு!