புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!

புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் மழை காலத்திற்கு முந்தைய புலிகள் கணக்கெடுப்பு துவங்கியது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானி சாகர், தாளவாடி, கடம்பூர், ஆசனூர், விளாமுண்டி உள்ளிட்ட பத்து வனச்சரகங்களில் மழைக்காலத்திற்கு முந்தைய புலிகள், சிறுத்தைகள் மற்றும் பெரிய தாவர உண்ணிகளான யானை, காட்டெருமை ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணி இன்று காலை துவங்கியது.

இன்று துவங்கி, ஆறு நாட்கள் தொடர்ந்து இந்த கணக்கெடுப்பானது நடைபெறும் இப்பணி வருகின்ற 17ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் நாளான இன்று பகுதிவாரியாக வனத்துறை ஊழியர்கள் பிரிந்து சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளான நாளை, நேர்கோட்டுப் பாதையில் சென்று கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். மேற்கண்ட  இரண்டு நாட்களைப் போலவே, மற்ற நான்கு நாட்களும், பகுதிவாரியாகவும், நேர்கோட்டுப் பாதையிலும், சுழற்சி முறையில், மொத்தம் ஆறு நாட்கள் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

ஒவ்வொரு குழுவிற்கும் வனக்காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட நான்கு பேர் என  மொத்தம் சுமார் 300-க்கும் மேற்பட்டோர், உணவு, தண்ணீர், ஜி.பி.எஸ், ரேஞ்ச் பைண்டர், காம்பஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களோடு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று, இந்த புலிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்த ஆறு நாட்கள் கொண்ட புலிகள் கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர், நான்கு நாட்கள் கழித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பத்து வனச்சரகங்களிலும் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளதாகவும்,  மூன்று மாதங்கள் அந்த தானியங்கி கேமராக்கள் மூலம் சிறுத்தை மற்றும் புலிகளின் நடமாட்டம், பாலினம் மற்றும் குட்டிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அந்த வீடியோ பதிவுகள் மற்றும் நேரடி கணக்கெடுப்பின் இறுதி எண்ணிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதன் மூலம், வனப்பகுதியில் 1.5 கிலோ மீட்டர் இடைவெளியிவ் ஒரு தானியங்கி கேமரா என மொத்தம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மட்டும் 700 கேமராக்களை பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 

சென்ற ஆண்டு வரை நடைபெற்ற கணக்கெடுப்பில்  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாகவும்,  100க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் ஆரோக்கியமான வனச்சூழலில் வாழ்ந்து வருவதாகவும், வனத்துறையினரின் புள்ளி விவரங்கள்  தெரிவிக்கின்றன. தற்பொழுது நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பின் இறுதி வடிவம் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகே,புலிகள் மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது குறித்து தெரிய வரும்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!