தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்...

தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் சார்பில் 2018ம் ஆண்டிற்கு பின் புலிகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. 

தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்...

தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் சார்பில் 2018ம் ஆண்டிற்கு பின் புலிகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. நான்கு கட்டங்களாக நடக்கும் கணக்கெடுப்பில், முதற்கட்டமாக தற்போது 950 தானியங்கி மேமெராக்கள் மூலம் புலிகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு கணக்கெடுக்கப்படுகிறது. இதற்காக வனத்திற்குள் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தானியங்கி கேமெராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

கேரள மாநிலம் இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்ட வன எல்லைக்கு உட்பட்ட 925 சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ளது தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம். இந்த புலிகள் காப்பத்தில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம். அதன்படி கடந்த 2014ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 45 புலிகள் வரை இருந்தது கணக்கெடுக்கப்பட்டது. இதையடுத்து 2018ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி புலிகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. இந்த முறை மிக துல்லியமாக புலிகளை கணக்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மூன்று கட்டங்களாக புலிகள் கணக்கெடுக்கப்படுகின்றன.

முதற்கட்டமாக தற்போது தானியங்கி கேமெராக்கள் மூலமாக கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் புலிகள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் 950 தானியங்கி கேமெராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. சென்சார் மூலம் இயங்கும் இந்த கேமெராக்கள் எதிர் எதிர் பகுதியில் பொருத்தப்படுகின்றன. இரு கேமெராக்கள் இடையில் செல்லும் புலிகளின் இருபக்க தோற்றத்தைக் கொண்டு, புலிகளின் கோடுகள் மூலம் துல்லியமாக கணக்கெடுக்கலாம் என்பது வனத்துறையினரின் திட்டமாக உள்ளது.

மனிதனின் கை ரேகைகள் போல ஒவ்வொரு புலியின் உடம்பில் இருக்கும் கோடுகள் வெவ்வேறானவை. எனவே தானியங்கி கேமெராவில் பதியும் ஒவ்வொரு புலியையும் தனித்தனியாக கணக்கிடலாம் என்பதாலும், அதே புலி வேறு கேமெராவில் பதிவானாலும் அதையும் கண்டறியலாம் என்பதாலும் இந்த எதிரெதிர் பக்கங்களில் கேமெராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இந்த கேமேராக்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒரு மாதம் வைக்கப்பட்டிருக்கும். அதற்குப்பின் அந்த கேமெராக்களின் பதிவுகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு அதே கேமெரா வேறு இடத்தில் வைக்கப்படும். இவ்வாறு இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை புலிகள் காப்பகமெங்கும் தானியங்கி கேமெராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதற்குப்பின் கேமெரா பதிவுகள் அனைத்தும் டோராடூனில் உள்ள வன உயிரியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

கேமெராக்களில் பதிவாகும் இதர வன உயிரினங்களும் கணக்கெடுக்கப்படும். அவை புலிகளின் இரைகளா என்பதும், புலிகள் வாழும் இடங்களின் அவற்றிக்கான இரைகள் போதிய அளவு உள்ளதா என்பதும் கண்டறியப்படும். இவ்வாறு முதற்கட்ட கணக்கெடுப்பு நடத்தப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் கட்டமாக புலிகளின் கால் தடங்கள், புலிகளின் எச்சம் கணக்கிடுதலும், மூன்றாம் கட்டமாக புலிகளின் உதிர்ந்த முடிகள், “டைகர் மார்க்” எனப்படும் மரங்களில் புலிகளின் நகக்கீறல்கள் கணக்கிடுதலும் நான்காம் கட்டமாக வேட்டையாடுதலின் போது புலிகளின் ரத்தப்படிவுகள் மற்றும் புலிகளின் வாழ்விடத்தை குறிப்பிடும் “யூரினல் மார்க்” ஆகியனவும் கணக்கிடப்பட உள்ளது. இவை அனைத்தையும் ஒப்பு நோக்கி புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முதற்பணி தற்போது தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் துவங்கியுள்ளது.

இரண்டு ஆண்டுகள் கொரோனா பொது முடக்கத்தால் கிடைத்த அமைதி, புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்திருக்கும் என்பதும் அதுவே நடக்க வேண்டும் என்பதும் புலிகள் காப்பக நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது.