108 ஆம்புலன்சில் இரட்டைப் பிரசவம்! ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளருக்குப் பாராட்டு மழை!

திருப்பத்தூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இரட்டைப் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் 108 வாகன ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

108 ஆம்புலன்சில் இரட்டைப் பிரசவம்! ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளருக்குப் பாராட்டு மழை!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பிரான்பட்டி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர், நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி ரோஜாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், 108 வாகனத்தை அழைத்துள்ளார்.

108 ஆம்புலன்சில் நடந்த இரட்டைப் பிரசவம்:

இதனையடுத்து, 108 வாகன ஓட்டுநர் பிரபு மற்றும் மருத்துவ உதவியாளர் மணி ஆகியோர், பிரான்பட்டி கிராமத்திற்கு விரைந்து சென்று, ரோஜாவை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள புழுதிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். வழியிலேயே கர்ப்பிணி பெண்ணுக்கு வலி அதிகமானதால், 108 வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, மருத்துவ உதவியாளர் மணி, ஓட்டுநர் பிரபு உதவியுடன், பிரசவம் பார்த்துள்ளார். 108 வாகன வாகனத்திலேயே ரோஜாவுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளருக்குப் பாராட்டு மழை:

புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், ரோஜா மற்றும் அவரது 2 குழந்தைகளும், மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, தாய் மற்றும் சேயை காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மணி மற்றும் 108 வாகன ஓட்டுனர் பிரபு ஆகியோருக்கு மருத்துவர்கள், செவிலியர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.