மத்திய அரசின் நோக்கங்களை நிறைவேற்ற...மண்ணின் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதா? - சீமான்

மத்திய அரசின் நோக்கங்களை நிறைவேற்ற...மண்ணின் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதா? - சீமான்

இந்திய ஒன்றிய அரசின் நோக்கங்களை நிறைவேற்ற விவசாய நிலங்களைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூரில் என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுவடைக்கு தயாராக இருந்த விளைநிலங்களை அறுவடை செய்தனர். இதனை கண்டித்து பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இடையே, அன்புமணி கைது செய்யப்பட்டதால், போராட்ட களம் வன்முறையாக வெடித்தது.

இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலூர் மாவட்டம், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களை அத்துமீறிக் கையகப்படுத்தும் அரச நிர்வாகத்தின் கொடுஞ்செயலைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய அறப்போராட்டத்தில் திமுக அரசால் ஏவப்பட்ட அரசு வன்முறையானது கடும் கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : மணிப்பூர் அமைதி திரும்ப ஆளுநரை சந்திக்கிறார் கனிமொழி!

விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல், விளை நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதைத் தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு, விளை நிலங்கள் பாதுகாக்கப்படுமென சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்த திமுக, தற்போது பயிர் விளைந்து அறுவடைக்கு‌ நிற்கும் விவசாய நிலங்களில் கனரக எந்திரங்களை இறக்கி, நிலங்களை அடாவடித்தனமாகப் பறிப்பதென்பது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த வேளாண் பெருங்குடி மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

சமூக நீதி அரசு, விடியல் ஆட்சியென வாய்கிழியப் பேசிவிட்டு, மத்திய அரசின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக மண்ணின் மக்களின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, ஒடுக்கி அடக்கும் திமுக அரசின் செயல்பாடு ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதமாகும். அதற்கு எனது எதிர்ப்புணர்வைப் பதிவுசெய்வதோடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கப்பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தத் துடிக்கும் மக்கள் விரோதச்செயலை கடும் மக்கள் போராட்டங்கள் மூலமாக முறியடிக்க வேண்டும் என்று சீமான் கூறினார்.