வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் பணிக்கு வர வேண்டும்- போக்குவரத்து ஊழியர்களுக்கு உத்தரவு:

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் பணிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் பணிக்கு வர வேண்டும்- போக்குவரத்து ஊழியர்களுக்கு உத்தரவு:

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக தொழிற் சங்கத்தினர், வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கினர். இதனையடுத்து ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 6ஆம் கட்ட பேச்சுவார்த்தை,  குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 

இதில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்று உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் உடனடியாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. 
 
இந்தநிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கு பெறாமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் இன்று அல்லது அதற்குப்பின் எந்த ஒரு நாளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் அந்நாளில் வழங்கப்பட்ட விடுப்புகள் யாவும் ரத்து செய்யப்படும் என துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வார விடுமுறை மற்றும் பணி ஓய்வில் உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் எனவும்  போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டப்படியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.