குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!!

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலங்களாகும்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதும், குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான வெயிலுடன் இடைவிடாது சாரல் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் இறுதி வரை பருவ மழை பெய்யாததால் குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்தது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தென்காசி, கடையம், குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. அதுமட்டுமின்றி மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

தற்போது குற்றால சீசன் துவங்கியுள்ளதாலும்,  விடுமுறை என்பதாலும் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.