ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி... வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்...

உசிலம்பட்டி அருகே ஆற்றை கடக்க முயன்ற விவசாயி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றைக் கடக்க முயன்ற விவசாயி... வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்...

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் சூழலில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவார பகுதியான உசிலம்பட்டி, பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது சாப்டூர் கேனி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் பேரையூர் அருகே சாப்டூர் - ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்  ராஜசேகர் என்ற  விவசாயி தனது தோட்டத்திற்கு செல்வதற்காக விட்டல்பட்டி ஆற்றை கடந்து செல்ல முயன்ற போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ஆற்றில் ராஜசேகர் அடித்துச் செல்லப்பட்டார்.

உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த டி.கல்லுப்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் விடிய விடிய இரவு முழுவதும் தேடி சாப்டூர் அருகே உள்ள கண்மாயில் ராஜசேகரின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.

விவசாயி ராஜசேகர் ஆற்றை கடக்க முயன்றபோது உறவினர் ஒருவர் ராஜசேகரை எச்சரித்தவாரு எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இச்சம்பவம் குறித்து சாப்டூர் போலிசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.