திருச்சி : 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரையாளர்கள்...!

கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு, மாதம் ஐந்தாம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி : 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கௌரவ விரிவுரையாளர்கள்...!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நவலூர். குட்டப்பட்டு பகுதியில்  பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதியம் வழங்க கோரிக்கை விடுத்து இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கல்லூரியில் பணியாற்றி வருகிற, கௌரவ விரிவுரையாளர்கள், பகுதிநேர விரிவுரையாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட விரிவுவரையாளர்கள் மற்றும் அலுவலக உழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. 

அரசு கல்லூரியில் வழங்கியது போல் அனைவருக்கும் சமமான ஊதியத்தை கௌரவ விரிவுரையாளருக்கும் வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது போல, கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு மாதம் ஐந்தாம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும்; இங்கு பணிபுரியும் அனைவருக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்;  பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், திருச்சி நவலூர், குட்டப்பட்டு பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், பாதிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று முன் தினம் முதல் பணிப் புறக்கணிப்பு செய்து கல்லூரி வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக வகுப்புகளில் பேராசிரியர்கள் பாடம் கற்பிக்காததினால் மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.