மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க முயற்சி.....முடியாத பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் ...அமைச்சர் ராமச்சந்திரன்

ஆட்கொல்லி புலியின் உயிருக்கு ஆபத்து இல்லாமல், மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க முயற்சிப்பதாகவும், முடியாத பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க முயற்சி.....முடியாத பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் ...அமைச்சர் ராமச்சந்திரன்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் மற்றும் மசினகுடி பகுதியில் 4 பேரை அடித்து கொன்ற புலியை பிடிக்க முடியாமல், கடந்த 8 நாட்களாக வனத்துறையினர் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மசினகுடி பகுதியில் புலியால் அடித்துக் கொல்லப்பட்ட மாதன் என்பவரின் வீட்டிற்கு வனத்துறை அமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும், புலியை பிடிக்க வனத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

முன்னதாக போக்கு காட்டி வரும் புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை அடுத்து, ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார். இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வரும் நிலையில், புலியை சுட்டுக் கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இந்த நிலையில், ஆட்கொல்லி புலியின் உயிருக்கு ஆபத்து இல்லாமல் மயக்க ஊசி செலுத்தி புலியைப் பிடிக்க முயற்சிப்பதாகவும், முடியாத பட்சத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், புலியை பிடிக்கும் பணியில் 3 மோப்ப நாய்கள், 2 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 3 ட்ரோன்கள், அதி நவீன கேமராக்கள், துப்பாக்கிகள், மயக்க ஊசி துப்பாக்கிகள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.