இளையராஜாவை கொச்சைப்படுத்த முயற்சிப்பது வேதனை அளிக்கிறது - அண்ணாமலை

இளையராஜாவை கொச்சைப்படுத்த முயற்சிப்பது வேதனை அளிக்கிறது - அண்ணாமலை

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பதமா பூஷன், பத்ம விபூஷண் விருதுகளை பெற்ற இசைஞானி இளையராஜா நியமன மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இளையராஜா குறித்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியது, இளையராஜா சாதி, மதம் என்பதை தாண்டி அவர் ஒரு மாமனிதர்..  அதையெல்லாம் தாண்டி அவர் ஒரு சிங்கமாக கருதப்படுகிறார்.

என்னை பொறுத்தவரை அவருக்கு எந்தவித அடையாளம் தேவையில்லை.. இதையெல்லாம் தாண்டி மேஸ்ட்ரோ என்ற பட்டம் கிடைப்பது சாதாரணமான விஷியம் இல்லை.. உலகில் இருக்கும் உட்சபட்ச இசை ஞானிகளுக்கு வழங்க கூடிய பட்டம் இது.. இளையராஜா அனைவர்க்கும் சமமானவர்.. ஆன்மீகத்தை நேசிக்கக்கூடியவர்.. என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், அம்பேத்கர் குறித்து எழுதப்பட்ட புத்தகத்தில் பிரதமர் மோடி பற்றி இளையராஜா முன்னுரை எழுதியது அவரின் தனிப்பட்ட கருத்து. பிரதமர் மோடியை மட்டும் அவர் பாராட்டி பேசியதில்லை. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசையும் இளையராஜா பாராட்டியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் குறித்து இளையராஜா கருத்து தெரிவித்திருந்தார், என்னைப் பொறுத்த வரையில் அது தனிப்பட்ட கருத்து. அதேபோல், பிரதமர் மோடி குறித்து அவருக்கு கருத்து இருந்தாலும், அதுவும் அவரது தனிப்பட்ட கருத்து. இதில் எதிலும் அரசியல் தேவை இல்லை என்றார்.

தமிழகத்தில் அரசியலில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சி நண்பர்கள் எப்படி ஆகிவிட்டனர் என்றால், இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்திருக்க கூடிய அங்கீகாரத்தை கூட கொச்சைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.. இது ரொம்ப வேதனையாக இருக்கிறது.. எனவே எதிர்கட்சினர், இந்த வேண்டாத விமர்சனங்களை விட்டுவிட்டு இளையராஜாவை வாழ்த்த வேண்டும் என்பது என்னுடைய பணிவான கருத்து என அண்ணாமலை கூறினார்.