கட்டுக்குள் வராத காய்கறி விலை... சாமானிய மக்கள் அவதி...

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை இன்னும் கட்டுக்குள் வராமல் உள்ளது.

கட்டுக்குள் வராத காய்கறி விலை... சாமானிய மக்கள் அவதி...

கடந்த மாதம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்தது. பருவ மழை ஓய்ந்து கிட்டதட்ட 2 வாரங்களுக்கு மேல் ஆகியும் காய்கறிகளின் விலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மழையால் காய்கறி பயிர்கள் சேதமானதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால்  உற்பத்தி குறைந்து விலை இன்னும் கட்டுக்குள் வராமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்த தக்காளி தற்போது விலை குறைந்து கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. சின்ன வெங்காயம், கேரட், பீட்ரூட், கத்திரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் கிலோ 70 முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பீன்ஸ், முட்டை கோஸ், பாவக்காய், புடலங்காய், சுரக்காய் போன்ற காய்கறிகள் கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுவதால் சாமானிய மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.