புனேவில் இருந்து 6.93 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை

புனேவில் இருந்து 6 லட்சத்து 93 ஆயிரம் கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.

புனேவில் இருந்து 6.93 லட்சம் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகள் சென்னை வருகை

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் மத்திய அரசிடம் இருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை என்றும் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குங்கள் என்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.  தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வருகிறது. 

தமிழகத்திற்கு இதுவரை  மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் செய்தும் 2 கோடியே 55 லட்சம் கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 2 கோடியே 50 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். தமிழகத்திற்கு ஆகஸ்டு மாத ஒதுக்கீட்டாக 79 லட்சம் தடுப்பூசியில் இதுவரை 29 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன. 

இந்த நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த  விமானத்தில் 58 பெட்டிகளில் 6 லட்சத்தி 93 ஆயிரத்தி 970 கோவிஷீல்டு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில்  உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. மத்திய தொகுப்பிற்காக 27 பெட்டிகளில் 3 லட்சத்தி 24 ஆயிரம் தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில் சென்னை வந்த தடுப்பூசிகள்  மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என  அதிகாரிகள் தெரிவித்தனர்.