12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் வைகை அணையில் தண்ணீர் திறப்பு...

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து விவசாயப் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் வைகை அணையில் தண்ணீர் திறப்பு...

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையால் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாத கரணத்தால், கடந்த 2008ஆம் ஆண்டிற்கு பிறகு வழக்கமாக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், புயல் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, முல்லைப் பெரியாறு அணை நிரம்பி வருவதால், அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கி வந்ததை தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு ஜூன் 4ஆம் தேதி உபரி நீரை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. 

அதன்படி, இன்று அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். பெரியாறு கால்வாய் பாசன வசதி பெறும் விவசாயிகளுக்காக தினமும் 900 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன்மூலமாக திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.