பல்வேறு வீடு.. பல்வேறு கோவில்கள்.. பூட்டை உடைத்து 32 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வீடு மற்றும் கோவில்களின் பூட்டை உடைத்து, சுமார் 32 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு வீடு.. பல்வேறு கோவில்கள்.. பூட்டை உடைத்து 32 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த டி.மங்கப்பட்டி கிராமத்தில் தமிழரசன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 15 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

நாமக்கல் அடுத்த பவித்திரம் அருகே அடகு கடையின் பின்புற சுவற்றை துளையிட்டு 13 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் மேஜையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். சத்தம் கேட்டு, காவலாளி கூச்சலிட்டதால், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள மாணிக்கவாசகர் கோவிலின் சுற்றுச்சுவர் வழியாக நள்ளிரவில், நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைக்க முயன்று முடியாமல் போனதால், அதில் சிறிய துளையிட்டு சுமார் 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் கோவில் பீரோவை உடைத்து அதில் இருந்த புத்தகம் உள்ளிட்ட பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

இதேபோல், பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தில் பாண்டியன் என்பவரது வீட்டில் நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். அப்போது உறங்கிக் கொண்டிருந்த பாண்டியனை இரும்பு கம்பியால் தாக்கியதுடன், அவரது மனைவி மற்றும் மகள் கழுத்தில் இருந்த சுமார் 4 சவரன் நகைகளை மிரட்டி பறித்துச் சென்றுள்ளனர்.

மேலும், வீட்டின் வெளியே பூட்டிவிட்டு, அவரது காரையும் திருடி சென்றுள்ளனர். 
இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.