எல்லைப் பிரச்சனையால் தவிக்கும் கிராம மக்கள்... இறந்தவர்களை தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம்...

மேலூர் அருகே எல்லைப் பிரச்சினையால்  சுடுகாட்டிற்கு வழி இன்றி தவிக்கும் மக்கள்   இறந்தவர்களை தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

எல்லைப் பிரச்சனையால் தவிக்கும் கிராம மக்கள்... இறந்தவர்களை தண்ணீரில் தூக்கி செல்லும் அவலம்...

மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் வஞ்சி நகரம் ஊராட்சியில் கண்டுகப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு நூத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஊரின் மத்தியில் சிங்கம்புணரிக்கு செல்லும் தார் சாலை ஒன்று செல்கிறது. இந்த  தார் சாலையின் ஒருபுறம் கண்டுகப்பட்டி எல்லையும், மறுபுறம் கொடுக்கம்பட்டி எல்கையுமாக இப்பகுதி அமைந்துள்ளது. கண்டுகப்பட்டி கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட பொது சுடுகாடு கொடுக்கம்பட்டி எல்கையில் அமைந்துள்ளது.

இதனால் இந்த இரண்டு பஞ்சாயத்துகளுமே   இது எங்களது எல்லை இல்லை என கூறி கோரிக்கைகளை  தொடர்ந்து புறக்கணித்து வருவதால் சுடுகாட்டிற்கு பாதை வசதி இல்லாமல் இறந்தவர்களை இடுப்பளவு தண்ணீர் நிரம்பிய கரடு முரடான கற்கள் நிறைந்த ஓடையின் வழியாக தூக்கி சென்று மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இறுதிச்சடங்கு செய்து வருகின்றனர். தற்போது மேலூர் பகுதியில்  தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் குளங்கள், கண்மாய்கள் நிரம்பி மறுகால் வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் நேற்று கண்டுகப்பட்டியில் செல்வம்(60) என்ற முதியவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆயத்தமாகி வந்த நிலையில் சுடுகாட்டிற்கு செல்லும் வழக்கமான ஓடைப் பகுதியில் கண்மாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் கழுத்தளவு பெருக்கெடுத்து கரை புரண்டு ஓடியது. இதனால் சுடுகாட்டிற்கு சடலத்தை தூக்கி செல்ல முடியாமல் நீண்ட நேரம் அப்பகுதியினர் தவித்தனர். பின்னர் இளைஞர்கள் கயிறு கட்டி தண்ணீரில் இறங்கி தூக்கி சென்று இறுதி சடங்கு செய்தனர். தங்களது சிரமத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சுடுகாட்டிற்கு செல்ல முறையான பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என தாலுகா மற்றும் ஒன்றிய நிர்வாகத்திற்கு கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.