அமைதி ஊர்வலம் என்ற பெயரில் வன்முறை ஏற்படுத்தலாம்...சேகர்பாபு பேச்சு!

அமைதி ஊர்வலம் என்ற பெயரில் வன்முறை ஏற்படுத்தலாம்...சேகர்பாபு பேச்சு!

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துபவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை எனவும், அமைதி ஊர்வலம் என்ற பெயரில் வன்முறை ஏற்படுத்தலாம் எனவும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி:

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தில் 44 இடங்களில் அனுமதி வழங்கி பேரணியை நடத்துமாறு உத்தரவிட்டது. மேலும், ஊர்வலத்தில் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அப்படி ஏதாவது நடந்தால் ஆர்.எஸ்.எஸ். தான் அதற்கு பொறுப்பேற்று கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதையும் படிக்க: நாளைய ஆர்.எஸ்.எஸ். பேரணி திடீர் ஒத்திவைப்பு...ஏன் தெரியுமா? விளக்கம் இதோ!

ஒற்றுமையை சீர்குலைக்கவே இந்த பேரணி:

இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகர் முழுவதும் 200 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பட்டாளம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு 44 இடங்களில் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துபவர்களுக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை; எப்படியாவது அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் கலவரத்தை ஏற்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.பேரணியின் நோக்கம் என்று கூறினார்.

முதலமைச்சர் எந்த எல்லைக்கும் செல்வார்:

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை அமைதி பூங்காவாக வைத்துக் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதற்கு அதன் எல்லை வரை சென்று நடவடிக்கை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

இந்த பின்னணியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாளை நடைபெறவிருந்த பேரணியை ஒத்தி வைத்திருப்பது குறிப்பிட்டத்தக்கது.