தமிழ்நாடு முதலமைச்சர் வருகை: சேலத்தில் சாலை ஓரங்களில் புதிதாக மரக்கன்றுகள்...!

தமிழ்நாடு முதலமைச்சர் வருகை:   சேலத்தில் சாலை ஓரங்களில் புதிதாக மரக்கன்றுகள்...!

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்க வருவதால் ஓமலூர் சாலை ஓரங்களில் புதிதாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை  என இரண்டு சுற்றுபயணம் மேற்கொள்கிறார். இன்று  சேலம் மாவட்டம் முழுக்க நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்ட பணிகளையும், கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஓமலூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதனை தொடர்ந்து வரும் 12-ம் தேதி காலை காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகிறார். இதற்காக நாளை மாலையே மேட்டூர் சென்று தங்குகிறார். இந்தநிலையில், ஓமலூரில் இருந்து மேச்சேரி வரை புதிதாக அமைக்கப்பட்ட சாலை ஓரமாக நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மரங்களை பாதுகாக்கும் வகையில் பச்சை நிர பாதுகாப்பு துணிகள் கட்டப்பட்டுள்ளது. இதேபோன்று ஓமலூர் பகுதியில் சாலை ஓரங்களில் புளிய மரம் உள்ளிட்ட சில மரங்கள் பட்டுபோய் காய்ந்து உடைந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது.  இந்த மரங்களை அகற்றுமாறு ஓமலூர் பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் அகற்றாமல் அலட்சியம் காட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று  மாலை முதல்வர் மேட்டூர் செல்லும் சாலையில் இருந்த பட்டுப்போன மரங்களையும், திரும்ப விமான நிலையத்திற்கு வரும் சாலை ஓரத்திலும் பட்டுப்போய் ஆபத்தான நிலையில் இருந்த மரங்களையும் வெட்டி அகற்றினர். போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் ஒவ்வொரு கிளையாக வெட்டி எடுத்து, முழு மரத்தையும் அகற்றி எடுத்தனர். மேலும், முதல்வர் செல்லும் சாலையில் சேதமடைந்து காணப்பட்ட பகுதிகளையும் சீரமைத்துள்ளனர். தற்போது ஓமலூர் பகுதியில் இருந்து மேட்டூர் செல்லும் சாலை அழகாக காட்சியளிக்கிறது.  

இதையும் படிக்க   | ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனைகள் உலக சாதனை...!