மாலை 6 மணிக்கு மேல் மயக்க ஊசி செலுத்தக்கூடாது!! T-23 புலிக்கு விதியை மீறி  மயக்க ஊசி செலுத்தப்பட்டதா?

டி-23 புலிக்கு விதியை மீறி மயக்க ஊசி செலுத்தப்பட்டுள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மாலை 6 மணிக்கு மேல் மயக்க ஊசி செலுத்தக்கூடாது!! T-23 புலிக்கு விதியை மீறி  மயக்க ஊசி செலுத்தப்பட்டதா?

கடந்த 20 நாட்களாக ஒட்டுமொத்த வனத்துறையினருக்கும் சிக்காமல் போக்கு காட்டி வந்த T 23 புலிக்கு, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் வைத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டும் T 23 புலி வனத்துறையிடம் இருந்து தப்பியுள்ளது. இதனையடுத்து, இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினர், இதுவரை புலி சிக்காததால் மீண்டும் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் புலியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில்,  முதுமலை செல்லக்கூடிய வன சோதனை சாவடி அருகே அந்த புலி சர்வ சாதாரணமாக சாலையைக் கடந்து சென்றுள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத வனத்துறையினர்  புலியை பிடிக்க விரைந்து உள்ளனர். மசினகுடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் புலி பதுங்கிய அடர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. காலை சுமார் 2 மணிவரை இந்த தேடுதல் வேட்டை நடந்தும் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு தேடுதல் வேட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதில் விதிமுறை மீறல் இருப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாலை 6 மணிக்கு மேல் புலிக்கு மயக்க ஊசி செலுத்தக் கூடாது என்ற விதி இருக்கிறது. அதனை மீறி இரவு 10 மணிக்கு வனத்துறை மயக்க ஊசி செலுத்தியது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே மசினகுடியை சுற்றியுள்ள கிராமப்பகுதியில் பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அதிகாலை முதலே வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறனர். இது கூடலூர் மற்றும் மசனகுடி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.