தின்னகோணம் அய்யாற்றில் நீர்வரத்து... பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு...

திருச்சி மாவட்டம் முசிரி அருகே தின்னகோணம் கிராமத்தில்  அய்யாற்றில் தண்ணீர் வரத்து- பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும்,தேங்காய், பழம் படைத்து வழிபாடு செய்தனர்.

தின்னகோணம் அய்யாற்றில் நீர்வரத்து... பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு...

முசிரி அருகே தின்னகோணம் அய்யாற்றில் கடந்த 15 வருடங்களுக்கு பிறகு தண்ணீர் வந்தது. இதையடுத்து விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சியுடன் ஆற்றிற்கு சென்று தண்ணீரில் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொல்லிமலையில் இருந்து வரும் தண்ணீர் பல்வேறு ஊர்களில் ஏரி குளங்களை கடந்து வாய்க்கால் வழியாக  அய்யாற்றில் வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் உள்ளன பாசன நிலங்கள் பயன்பெறும்.

இந்நிலையில் பசுமை சிகரம் அறக்கட்டளையின் நிறுவனர், விதை யோகநாதன் தலைமையில் பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள், தின்னகோணம் அய்யாற்றில் திரண்டனர். அங்கு ஆற்றில் வரும் தண்ணீருக்கு மலர் தூவியும்.தேங்காய் பழம் படைத்தும், ஆரத்தி எடுத்தும் வணங்கி வழிபட்டனர்.

இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, கடந்த 15 வருடங்களுக்கு பிறகு அய்யாற்றில் தண்ணீர் வருகிறது. இதனால் இப்பகுதியில் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும். குடிநீர் தட்டுப்பாடு குறையும். அய்யாற்றில் 15 வருடங்களுக்கு பிறகு தண்ணீர் வருவதை பார்ப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தனர்.