மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்...!

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது  காரில் மறைத்து வைத்திருந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா உருவ பொம்மையை எடுத்து வந்து பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர். அப்போது காவல்துறையினர் தடுக்க முயன்றும் தீ வைக்கப்பட்டது. இதனால் காவல் துறையினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

தருமபுரியில் தொலைத் தொடர்பு  அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிக்க : காயமடைந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்...!

ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீதாலட்சுமி தலைமை வகித்தார். தமிழ்நாட்டிற்கு தேவையான  தண்ணீரை பெறுவதற்கு உடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

கோவை டாடாபத் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எங்கள் காவிரி எங்கள்  உரிமை, தண்ணீரை கொடு அல்லது தனியாக விடு போன்ற முழக்கங்களை எழுப்பினர். 

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மாநில உரிமையை தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.