என்னது..? அதிமுகவை தொடங்கியது எம்.ஜி.ஆர் இல்லையா? 

1972ம் ஆண்டு ஆக்டோபர் 17ம் நாள் எம்.ஜி. ஆர் அதிமுக எனும் புதிய கட்சியை தொடங்கினார் என்பதே பலரும் அறியப்பட்ட கருத்து ஆனால் உண்மையில் எம்.ஜி.ஆரால் தான் அதிமுக தொடங்கப்பட்டதா என்றால் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

திமுகவில்  பொருளாளராக இருந்த எம்.ஜி. ஆர் கட்சி நிதிக்கான கணக்கு கேட்டார் என்ற காரணத்தால் நீக்கப்பட்ட பிறகு புதிய கட்சி தொடங்க விருப்பம் தெரிவித்தார். அப்போது அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் பதிவு செய்து வைத்திருந்த அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார் எம்.ஜி. ஆர்.  “ ஒரு சாதாரண தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக்கொண்டேன்” என்று அப்போது எம்.ஜி. ஆர்  அறிவித்தார். இப்படித்தான் முதன்முதலில் அதிமுகவுக்கு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அதன்பிறகு அதிமுகவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற தேசிய கட்சியாக மாற்றினார் எம்.ஜி. ஆர்

அன்றுமுதல் தொண்டருக்கு முக்கியத்துவம் வழங்கும் இயக்கமாக அஇஅதிமுக இயங்கி வருகிறது, அவ்வாறு தொடங்கப்பட்ட அதிமுக இன்று 52ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடி வருகிறது. எம்.ஜி. ஆர் தொடங்கி தற்போது இ.பி.எஸ் வரை காலங்கள் கடந்து அதிமுக பயணித்து வந்தாலும் இன்றுவரை சலசலப்புகளுக்கு பஞ்சம் இருந்ததில்லை. 

1972ல் கட்சி  தொடங்கி, 1977ல் ஆட்சியை பிடித்து, 1987ம் ஆண்டு தான் மறையும் வரை முதலமைச்சராகவே இருந்தார் எம்.ஜி. ஆர். அவரது மறைவுக்கு பின் இரட்டை புறா - சேவல் என உடைந்த அதிமுகவை 1989 ஆண்டு தேர்தலுக்கு பிறகு கைப்பற்றினார் ஜெயலலிதா. அன்றுமுதல் ராணுவ கட்டுக்கோப்போடு கொண்டு செல்லப்பட்ட அதிமுகவுக்கு மீண்டும் 2016ல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சோதனை ஏற்பட தொடங்கியது. ஓ.பி.எஸ் இன் தர்மயுத்தம் பிறகு ஓ.பி.எஸ் இணைப்புக்காக  சசிகலா , டி.டி.வி தினகரன் நீக்கம்  என 2016 முதல் 2021வரையிலான காலக்கட்டத்தை பல்வேறு சிக்கல்கள்களோடு அதிமுக கடந்து வந்தது.

2021 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு இரட்டை தலைமையே தேர்தல் தோல்விக்கு காரணம் என போர்க்கொடி உயர்த்தி ஒற்றை தலைமையை நோக்கி அதிமுக நகர்ந்தது. 2022 ஜுலை 11ல் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு ஒற்றை தலைமைக்கு வழி கொடுக்கும் வகையில் ஓ.பி.எஸ் ஐ கட்சியிலிருந்து நீக்கியது. நீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரத்தை கட்சியின் ஒட்டுமொத்த பலமே தன்னிடம் தான் இருக்கிறது என்று ஆதாரத்துடன் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி  அதிமுகவின் பொதுச்செயலாளராக உருவெடுத்தார். 

பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது முதல் பம்பரமாய் சுழன்று வரும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக உறுப்பினர் சேர்த்தல் பணிகளை துரிதப்படுத்தினார். இந்த நடவடிக்கையின் மூலம் ஒன்றறை கோடியாக இருந்த உறுப்பினர்களை 2 கோடிக்கும் அதிகமாக மாற்றி காட்டினார் எடப்பாடி பழனிசாமி. சிதறிக்கிடந்த அதிமுகவினரை ஒன்று திரட்டியதோடு மட்டுமில்லாமல் மாவட்ட வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணிகளையும் அவர் மேற்கொண்டார்.  நீண்ட நாட்களாக அதிமுக தொண்டர்கள் மனதை நெருடிக்கொண்டிருந்த பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தது ஜெயலலிதாவின் மன தைரியத்தை மிஞ்சியதாக தொண்டர்களால் பார்க்கப்பட்டது.  

எம்.ஜி. ஆர் ஜெயலலிதா வரிசையில் தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் மூன்றாம் தலைமுறைக்கான தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக 52ம் ஆண்டை கொண்டாடி வருகிறது.

இதையும் படிக்க: சுற்றி வந்த அமைச்சர்; விரட்டி பிடித்த விவசாயிகள்!