பழங்குடியினருக்கான நலனுக்காக அரசு செய்தது என்ன..? எம்.பி.யின் கேள்விகளால் திணறிய மத்திய அமைச்சர்...

மத்திய அமைச்சரை கேள்விக்கணைகளால் திணறடித்தார் தி.மு.க. எம்.பி. து. ரவிக்குமார்.

பழங்குடியினருக்கான நலனுக்காக அரசு செய்தது என்ன..? எம்.பி.யின் கேள்விகளால் திணறிய மத்திய அமைச்சர்...

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 20 நாட்களுக்கு (டிசம்பர் 23 ஆம் தேதி) வரை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதாக்கள் உள்பட கிரிப்டோ கரன்சி மற்றும் டிஜிட்டர் கரன்சியை ஒழுங்குமுறைப்படுத்துவது, ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சிகளை கொண்டு வர அனுமதிப்பது, தகவல் பாதுகாப்பு, அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களின் பதவி காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டிப்பது, உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் திருத்தச் சட்டம், உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான ஊதிய திருத்த மசோதா 2021, திவால் சட்டத் திருத்த 2ஆவது மசோதா, ஓய்வூதிய ஒழுங்குமுறை மேம்பாட்டு மசோதா, குடியேற்றச் சட்டம் 1983 மாற்றப்பட்டு புதிய குடியேற்ற மசோதா, மனிதக் கடத்தலை தடுத்தல், பாதுகாத்தல், மறுவாழ்வு மசோதா என்று  26 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நேர்மறையான, ஆக்கப்பூர்வமான விவாதங்களாக இருந்தால் எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்கவும் ஆலோசனை நடத்தவும் மத்திய அரசு தயாராகவே உள்ளது என்று இந்த கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் கூறிருந்தார்.

நேற்று நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில், திமுக பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் து. ரவிக்குமார், தமிழ்நாடு அரசு உட்பட அனைத்து மாநில அரசாங்கங்களும் பழங்குடியினர் மக்களுக்கு சாதிச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடைமுறையை எளிதாக்கியதா, பழங்குடியினருக்கான வீடு வழங்கும் திட்டதின் நிலை, நாட்டில் பழங்குடியினரின் கல்வியறிவு அளவை அதிகரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகள், பழங்குடியினருக்கான சிறப்பு வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசிடம் உள்ள திட்டம், பல்வேறு மாநிலங்களின் காவல் துறை இன்னும் சில பழங்குடியின சமூகங்களை வழக்கமான குற்றவாளிகளாகக் கருதும் காலனித்துவ மனநிலையை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் என்ன என்பதை குறித்து பல கேள்விகளை பழங்குடியினர் நலவாழ்விற்கான மத்திய அமைச்சர் ஸ்ரீ பிஷ்வேஸ்வர் துடுவிடம் எழுப்பினார்.  

அதற்கு பதிலளித்த பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ்/சமூக அந்தஸ்து வழங்குதல் மற்றும் சரிபார்த்தல் பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசு/ஒன்றிய நிர்வாகத்திற்கு உரியது இத்தகவல் மத்திய அரசால் பராமரிக்கப்படவில்லை என்று கூறினார். பிறகு பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அனைத்து கல்வி நிலைகளிலும் பாலினம் மற்றும் சமூகப் பிரிவு இடைவெளிகளைக் குறைத்து SC, ST, சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் திருநங்கைகள் பயன்பெறும் வகையில் சமக்ரா சிக்ஷா திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், தேசிய அளவில் SC/STயினருக்கு குறைந்தபட்சம் 60% என்ற இலக்குடன் தகுதியுள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.95 கோடி திடமான நிரந்தர வீடுகள் கட்டப்படுவதை நோக்கமாகக் கொண்டு '2022க்குள் அனைவருக்கும் வீடு' என்ற பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தினை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது என்று கூறி இறுதியாக நாட்டில் நடக்கும் குற்றங்களின் பதிவுகளை பராமரிக்கும் பொறுப்பை பெற்றுள்ள தேசிய குற்றப் பதிவுப் பணியகம் எந்தவொரு குற்றத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெறுவதற்கு இ-போர்ட்டல்கள் சேவை மையங்கள் கொண்ட சுதந்திரமாகப் புகாரளிக்க பெண்களை ஊக்குவிப்பதற்காக காவல் நிலையங்களில் மகளிர் உதவி மையங்களைத் திறப்பது போன்ற முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்றும், சில மாநிலங்களின் காவல் துறை பழங்குடியினரைப் வழக்கக் குற்றவாளிகளாகக் கருதும் சம்பவங்கள் குறித்து அமைச்சகத்திற்கு எந்த அறிக்கையும் வரவில்லை, அதுமட்டுமின்றி சட்டம் ஒழுங்கைப் பேணுதல், குடிமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அந்தந்த மாநில அரசுகளைச் சார்ந்தது. இதற்கு மத்திய அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்றும் பதிலளித்துள்ளார்.

அதன்பின்னர் காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி, வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் பதிவை உருவாக்கி அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.  இதேபோல்,  காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் போராட்டத்தின் போது கடந்த ஓராண்டில் உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்தார்.

இப்படி அனல் பறக்கும் விவாதங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் குளிர்கால கூட்டத்தொடர் இன்னும் 20 நாட்கள் நீடிக்கவுள்ள நிலையில் இன்னும் என்ன என்ன விபரீதங்கள் நடக்க உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.