மாற்றப்பட இருக்கிறதா அமைச்சரவை...! காரணம் என்ன?

மாற்றப்பட இருக்கிறதா அமைச்சரவை...! காரணம் என்ன?

தமிழ்நாட்டில் அமைச்சரகள் மற்றும் துறை செயலாளர்களை நிர்வாக வசதிக்காக மாற்றம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், 2021 மே, 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்ததது. ஆட்சி அமைத்து ஓராண்டு முடிவதற்குள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக அமைச்சரவையில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சா.சி. சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்கள்.

அதன் பின்னர், கடந்த டிசம்பர் 14ம் தேதி  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து டிசம்பர் 15ம் தேதி அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாக்கள் மாற்றியமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் பட்ஜெட் கூட்ட தொடர் நடந்து முடிந்து உள்ள நிலையில்‍ அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல துறை ரீதியான செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக, நிதியமைச்சரின் ஆடியோ விவகாரம், முதலமைச்சர் சட்டப் பேரவையில் இல்லாதபோது 12 மணி நேர வேலை மசோதாவை நிறைவேற்றியது, அனைத்துக் குடிமக்களையும் பயங்கரவாதியாக சித்தரிக்கக் கூடிய அளவில் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் முதல்வருக்கே தெரியாமல் திருத்தம் செய்து மசோதா நிறைவேற்ற முனைந்தது உள்ளிட்ட சம்பவங்களால் முதலமைச்சர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. இவ்வகையான அமைச்சர்களின் செயல்பாடுகள், துறை செயலாளர்களின் செயல்பாடுகள் காரணமாக பல்வேறு மாறுதலை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துறை ரீதியான செயலாளர்களை மாற்றம் செய்வதோடு மட்டுமின்றி  தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கவும், புதிய முகங்களுக்கு அமைச்சராக வாய்ப்பளிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.