பெண் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம்! காரணம் என்ன?

பெண் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம்! காரணம் என்ன?

கோவையில் பணியில் இருந்த தமிழ்நாட்டின் முதல் பெண் தனியார் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கோவை காந்திபுரம் - சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார்பேருந்தை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா (வயது 24) என்ற இளம்பெண் ஓட்டி வந்தார். தமிழகத்தில் தனியார் பேருந்தை ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் என பலரும் பாராட்டினர். இவர் பேருந்து ஓட்டும் காட்சிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் கூட இவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கோவை வந்திருந்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இன்று காலை ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் ஏறி பயணித்தார். அப்போது ஓட்டுநர் ஷர்மிளாவை வெகுவாக பாராட்டினார். ஆனால் கனிமொழி பாராட்டிய சில மணி நேரத்ததிலேயே அவர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஓட்டுநர் ஷர்மிளா கூறுகையில், ' நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்னை வந்து பாராட்டினார். அவர் நான் ஓட்டிக் கொண்டிருந்த பேருந்தில் டிக்கெட் எடுத்து தான் பேருந்தில் பயணித்தார்.  அப்போது நடத்துநர் பயணிகளிடம் மரியாதைக் குறைவாக பேசினார். எனவே, அவரிடம் மரியாதையாக பேசுமாறு அறிவுறுத்தினேன். ஆனால், பேருந்து உரிமையாளர் என்னிடம், நீ பிரபலமாகுவதற்காக இதெல்லாம் செய்வாயா? எனக் கூறி என்னை பணியில் இருந்து விலகுமாறு கூறினார்' என தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் இதேபோல பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூட இந்த பேருந்தில் பயணித்து ஷர்மிளாவை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க :டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!