பள்ளிகள் திறப்பது எப்போது…? அதிகாரிகள் ஆலோசனை!

பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னையில்  நடைபெறுகிறது. பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மாலை கலந்து கொள்கிறார்.

பள்ளிகள் திறப்பது எப்போது…? அதிகாரிகள் ஆலோசனை!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், முதலில் அரசு தேர்வுகள் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2021 தொடர்பான விடைத்தாள் மதிப்பீடு முகாம்கள் மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய வருவாய் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணி தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொண்டு மதிப்பீட்டு பணியினை அரசு தேர்வுகள் இயக்கத்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. 

இதனை தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்கக அதிகாரிகளுடனும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக அதிகாரிகளுடனும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளுடனும், அதனைத் தொடர்ந்து மாலையில் தொடக்கக் கல்வி இயக்கக அதிகாரிகளுடனும், முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். 

ஊரடங்கால் பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வித்துறை அதிகாரிகளுக்கு எதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்குகின்றனர். செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என்று திட்டமிட்டுள்ள நிலையில்,  பள்ளி கல்விதுறை அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.