கழிவு நீர் தொட்டியை தூய்மை செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலி...!

கழிவு நீர் தொட்டியை தூய்மை செய்தபோது  விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலி...!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 2 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். 

ஆவடியில் உள்ள ஓ.சி.எப் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில், பட்டாபிராம் பகுதியை சேர்ந்த மோசஸ் மற்றும் ஆவடி பஜார் பகுதியை சேர்ந்த தேவன் ஆகியோர் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக விஷ வாயு தாக்கியதில் 2 பேரும் மயங்கி விழுந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் மோசஸ் மற்றும் தேவன் ஆகியோர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், ஒப்பந்த தொழிலாளர்களின் நிறுவன உரிமையாளர் சம்பத் மற்றும் மேற்பார்வையாளர் மனோ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதனிடையே, விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

இதையும்  படிக்க  | ” கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுத்த கூடாது” - அமைச்சர் கே.என்.நேரு