ஹெச்.ராஜாவை ஏன் இதுவரை கைது செய்யவில்லை..? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி...

தாம் சட்டவிரோதமாக செயல்பட்டால் தம்மை காவல்துறை கைது செய்யலாம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜாவை ஏன் இதுவரை கைது செய்யவில்லை..? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி...

தமிழ்நாடு என்று பெயர் சூட்ட 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி உயிர்நீத்த ஈகி சங்கரலிங்கனாரின் 65-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கே.கே.நகரில் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த் தேசிய இயக்க தலைவர் மணியரசன், நாகா மக்கள் இயக்கம் சார்பில் வேணு, பஞ்சாப் ஊடகவியலாளர் பரம்ஜித் சிங் காசி, திரிபுரா மக்கள் முன்னணியைச் சேர்ந்த பதால் கன்யா ஜமாத்தியா, பஞ்சாப்பின் தல் கல்சா அமைப்பைச் சேர்ந்த பரம்ஜித் மண்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வு தொடங்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேசியம் பேசும் தமிழர், திரிபுரா, நாகலாந்து, மணிப்பூர், பஞ்சாப் மாநிலத்தோர் ஒன்று கூடி இந்நிகழ்ச்சியை நடத்தி வருவதாகவும், தமிழ் தேசியத்துக்காக போராடும் தமக்கு ஆதரவு தெரிவிக்க வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்தோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி வென்றிருப்பதாகவும், படுதோல்வி அடையவில்லை என்றும், வளரும் கட்சி படிப்படியாகவே வளரும் என்றும், இப்போது இல்லை என்றால் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி சிறப்பான வெற்றியைப் பெறும் என்றும் சீமான் பேசினார்.

வாக்குகளுக்கு பணம், பரிசுப்பொருள், கவர்ச்சிகர வாக்குறுதி தராமல் போராடிவரும் நாம் தமிழர் கட்சிக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முதலில் தனித்து களம் கண்டு தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்றும் சீமான் பேசினார்.

நாம் தமிழர் கட்சி பலமாக இருப்பதால் தான் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களை எதிர்த்து போராடுவதாக பேசிய சீமான், ஆட்சியில் உள்ள கட்சிக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது இம்முறையும் கடந்த காலங்களிலும் நிரூபிக்கபட்டுள்ளதாகவும் கூறினார்.

இதுவரை ஆட்சிக்கே வராத கட்சியாக உள்ள நாம் தமிழர் கட்சியை ஆட்சியில் இருந்த, இருக்கும் கட்சிகள் பொறாமையில் திட்டுவதாக பேசிய சீமான், முதலில் எது பயங்கரவாதம் என்பதை வரையறுத்துவிட்டு, பின் தாம் சட்டவிரோதமாக செயல்பட்டால் தம்மை கைது செய்துகொள்ளலாம் என்றும் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் சாட்டை துரைமுருகன், அடிக்கடி சாட்டையை வீசிவிடுவதால் பலருக்கு வலிப்பதாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பேசிய சீமான், சட்டம் - ஒழுங்கை மீறுவோரை காவல்துறை தண்டிக்க வேண்டும் என்றும் இதுவரை ஏன் ஹெச்.ராஜாவை கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அதிகளவில் வெற்றி பெற்றிருப்பதற்கு அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு தான் காரணம் என்றும் சீமான் பேசினார்.