நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கூட கால அவகாசம் ஏன் தேவை? 2 நாட்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கூட கால அவகாசம் ஏன் தேவை என்ற விளக்கத்துடன் 2 நாட்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கூட கால அவகாசம் ஏன் தேவை?  2 நாட்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு...

தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்துவது தொடர்பான வழக்கில், தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தலுக்கு கூடுதல் கால அவகாசம் கோரி கடந்த 4ம் தேதி, உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தது. 

அதில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 7 மாத காலம் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது  தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என கோரினார்.

ஆனால் ஒரு நாள் கூட காலஅவகாசம் நீட்டிக்க முடியாது என கடுமை காட்டிய தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றுவது தங்களுக்கு கடினமாகவே இருக்கிறது என கூறினார்.மேலும்  நாடாளுமன்ற தேர்தல்,  சட்டமன்றத் தேர்தல், அரசியல் கட்சிகளின் கூட்டங்களை நடத்த முடியும் தங்களுக்கு,  உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏன் கூடுதல் கால அவகாசம் தேவை என கேள்வி எழுப்பினார்.  

அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர்,  கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை நாடு முழுவதும் உள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகளை பகுதி பகுதியாக பிரித்து, பலத்த ஏற்பாடுடன் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

அதனுடன் கொரோனா அதிகரிக்க தொடங்கியதால் மேற்கொண்டு பணிகளை தொடர முடியவில்லை என்வும், அதனால் தான் காலஅவகாசம் கேட்பதாகவும், கோரப்பட்ட 7 மாதங்களில் 3 முதல் 4 மாதங்கள் அவகாசம் வழங்கினால்  போதுமானது என கூறினார். 

மேலும் 9 மாவட்டங்களுக்கான ஊரகப்பகுதி உள்ளாட்சித் தேர்தலை நடத்த திட்டமிட்டு அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சனும் கூடுதல் அவகாசத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. 

இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கோருவது ஏன் ?  எவ்வாறு தேர்தலை நடத்த திட்டமிட்டு உள்ளீர்கள் ?  இன்னும் என்னென்ன பணிகள்  செய்யப்பட வேண்டியிருக்கிறது ?  உள்ளிட்ட  விவரங்களுடன் புதிய பிரமாணப் பத்திரத்தை 2 தினங்களுக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் பிரமாண பத்திரம் தாக்கலுக்கு பின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.