"உதவாக்கரை ஸ்டாலின்" எச்.ராஜா சாடல்!

"உதவாக்கரை ஸ்டாலின்" எச்.ராஜா சாடல்!

அமைச்சர் உதயநிதியை  உதவாக்கரை ஸ்டாலின் என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பேட்டியளித்துள்ளார்.  

திருச்சி மாவட்டம் திருவாணைக்காவலில் விளையாட்டு மன்றம் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய ஜனதாக் கட்சி மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், 1944 ஆம் ஆண்டு வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது, அப்படியே வெளியேறுவதாக இருந்தால் லண்டனில் இருந்துகொண்டாவது் மெட்ராஸ் ராஜதாணியை வெள்ளையர்கள் ஆள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய தேசத்துரோகி இன்றைக்கு சித்தாந்தவாதியாக மாறிவிட்டாரா என தந்தை பெரியாரை விமர்சித்தார்.

புராண காலத்திலிருந்து வர்ணம் விட்டு வர்ணம் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் இருந்தது. அதற்கு பிறகும் கல்கி கிருஷ்ணமூர்த்தியும் எம் எஸ் சுப்பு லட்சுமியும் திருமணம் செய்துகொண்டார்கள். எத்தனை பிராமணர்கள் வீட்டில் எம் எஸ் சுப்புலட்சுமி படம் பூஜை அறையில் உள்ளது காட்டவா? என கேள்வி எழுப்பிய எச் ராஜா, இவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என குற்றம் சாட்டினார். மேலும் அவர்கள் வெள்ளைக்காரன் கைக்கூலி எனவும் கூறினார். 

இதனால் இவர்கள் இந்து சமயத்தை இழிவாகப் பேசுகிறார்கள் எனக் கூறிய எச் ராஜா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்துக்களை இனப்படுகொலை செய்வதாக கூறியதாக குற்றம் சாட்டினார்.  இதற்கு செய்தியாளர்கள் இனப்படுகொலை என தவறாக பதிவு செய்வதாக கூறியதற்கு, மலேரியா கொசு போல, டெங்கு கொசு போல ஒழிப்பதென்றால் என்ன அர்த்தம் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 

தொடர்ந்து செய்தியாளர்கள் திராவிடத்தை ஒழிப்போம் எனக் கூறுகிறீர்களே? என கேட்டதற்கு, திராவிடம் என்பது சித்தாந்தம். சனாதனம் என்பது மனிதர்கள் என மழுப்பிய எச் ராஜா, நீங்கள் என்ன அறிவாலயத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இங்கு வந்திருக்கிறீர்களா? எனவும் செய்தியாளர்களை பார்த்து எதிர்கேள்வி எழுப்பினார். மேலும் அறிவாலயத்தின் வாசற்படியில் நின்று பிச்சை ஏந்துவதை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டார். 

தொடர்ந்து, "நீங்கள் திராவிடத்தை சித்தாந்தம் என்கிறீர்கள். அவர்கள் சனாதனத்தை சித்தாந்தம் எனக் கூறுகிறார்கள்" என செய்தியாளர்கள் பதிலளித்ததற்கு, "அப்படி எல்லாம் இல்லை" என்று அடம்பிடித்த எச் ராஜா, 80 சதவீத மனிதர்களை கொல்வேன் என்று உதயநிதி கூறியதாகவும் அவரை உதவாக்கரை என்றும் வசைபாடினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா விவாதத்திற்கு அழைக்கிறார் நீங்கள் விவாதிக்க தயாரா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆராசாவை கேடுகெட்டவன் எனக் வசைபாடினார். மேலும் ஆ ராசா இந்துக்கள் அனைவரும் விலைமாதர்கள் என ஆராசா கூறியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க: "ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்றவர் கருணாநிதி" சரத்குமார் பேட்டி!