” என்னை பற்றி குறை சொல்லும் அமித்ஷா அவரது மகன் ஜெய்ஷா பற்றி சொல்வாரா ? - உதயநிதி ஸ்டாலின்

” என்னை பற்றி குறை சொல்லும் அமித்ஷா  அவரது மகன்  ஜெய்ஷா  பற்றி சொல்வாரா ? -  உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி மாநில,மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் அறிமுக கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின்,இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியாதாவது:- 

2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர் அணி நிர்வாகிகள்  வெற்றிக்கு உழைத்தது போன்று வர உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கும் உழைக்க வேண்டும். இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் மெரிட் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.இளைஞர் அணி நிகழ்ச்சிகள்  அனைத்தையும் அதில் நோட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 

சின்னவர் சின்னவர் என்று என்னை சொல்கிறார்கள் என்னை விட சீனியர்ஸ் நிறைய பேர் இருக்கிறார்கள்.இந்த சின்னவரை நம்பி மிகப்பெரிய பொறுப்புகள் கொடுத்திருக்கிறார்கள் என்றால், நான் உங்களை நம்பி தான் இருக்கிறேன்.பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் மக்களுக்கும் பிரச்சனை வரும்போதெல்லாம் நாம் மக்கள் பக்கம் நின்று இருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிக்கு இளைஞர் அணி நிர்வாகிகளின் பங்கு முக்கியமானது.

நேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது என்னைப் பற்றியும் பேசி உள்ளார்.என்னை முதலமைச்சராக்குவது தான் கழகத்தின் நோக்கம் என்று அமித்ஷா பேசியுள்ளார்.மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகி உள்ளேன்.  அமித்ஷாவின் மகன் எப்படி பிசிசிஐ செயலாளராக தேர்வானார்?  எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார் ? அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா ஒரு நிறுவனத்தை நடத்துகிறார்.  2014 ஆண்டு அந்த நிறுவனத்தின் மதிப்பு 75 லட்சம் ரூபாய். ஆனால் இப்போது அதன் மதிப்பு 130 கோடி ரூபாய் எப்படி இவ்வளவு மதிப்பு வந்தது? 

என்னை பற்றி குறை சொல்லும் அமித்ஷா பிசிசிஐ செயலாளராக ஜெய்ஷா தேர்வானது எப்படி ? என்று கூற முடியுமா?”,   எனக் கேள்வி எழுப்பினார். அதோடு,   திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும்  என்று தெரிவித்தார்.

பின்னர், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசும் போது :- 

” அண்ணா, கருணாநிதியை மட்டும் தான் மக்களால் ஏற்று கொண்டார்கள்.எதிர்காலத்தில் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது உதயநிதி ஸ்டாலின்.

அவரை கட்சியில் தற்போது ஏற்றுக் கொள்ளும் நிலைமை இருக்கிறது, இது ஆட்சியிலும் வந்து கொண்டிருக்கிறது அது இன்னும் வளர வேண்டும்.இளைஞர் அணியில் இருந்து தான் அடுத்த பொதுச்செயலாளர் துணை பொருளாளர் வர இருக்கிறார்கள் எதிர்காலத்தில் தமிழக அமைச்சரவையே இங்கிருந்து வரும் ஆனால் ஆட்சி என்பது வேறு கொள்கை என்பது வேறு.

அமித்ஷாவையும் மோடியும் எதிர்ப்பதற்கு பல தலைவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் அவர்களிடத்தில் போதுமான தத்துவம் இல்லை.இந்த ஒற்றை தலைவரை பார்த்து ஏன் இந்தியா பயப்படுகிறார்கள், மோடியின் மத்திய பிரதேசத்தில் இருந்து ஸ்டாலினை பற்றி பேசுகிறார்.

அவரைப் பொறுத்தவரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பவர் தனி மனிதன் அல்ல; இவருக்கு பின்னால் தத்துவம் இருக்கிறது.  அது பெரியார் அண்ணா கலைஞரின் தத்துவம். 

தனி மனிதரை வீழ்த்துவது எளிது தத்துவத்தை வீழ்த்த முடியாது. எந்த கொம்பனாலும் முதல்வரை வீழ்த்த முடியாது”, என்று கூறினார். 

அவர்களைத் தொடர்ந்து,  டி.ஆர்.பாலு பேசுகையில்:- 

முதல்வரின் மகனை பார்த்து அமித்ஷா கேள்வி கேட்கிறார். எந்த அளவுக்கு உதயநிதி உயர்ந்திருக்கிறார் என்று அமித்ஷா உணர வேண்டும். மேலும், உலகம்  முழுவதும் இவர்தான் பெரிய ஆள் என்று சொல்லப்படுகிற அமித்ஷாவுக்கு உதயநிதி பதில் சொல்கிறார் என்றால், உதயநிதிக்கு ஈடாக அமித்ஷாவை நினைப்பதா அல்லது அமித்ஷாவுக்கு ஈடாக உதயநிதியை நினைப்பதா என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

எப்போது முதலமைச்சர் ஆகிறார் எப்போது தமிழக தலைவர் ஆகிறார் என்பதை நாடு சந்திக்கும். நாடு முடிவெடுக்கும் அதுவரை உதயநிதியின் கரத்தை வெளிப்படுத்துவது நம் கடமை. தமிழகத்தின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக உதயநிதி வளர வேண்டும் என்றார்.

இனமானம் காக்க இயக்கத்தை வளர்த்தெடுத்த பெரியார் - பேரறிஞர் - முத்தமிழறிஞர் - பேராசிரியர் ஆகியோரின் கொள்கை பாதையில், அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறது கழக இளைஞர் அணி.  செயலாற்றல் மிக்க திமுக இளைஞரணிக்கு  புது இரத்தம் பாய்ச்சிடும் வகையில் புதிதாகத் தேர்வாகியுள்ள, மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்ட அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

கழக வளர்ச்சிக்கான நாற்றங்காலாக விளங்கும் இளைஞர் அணியைக் கட்டமைத்த நம் கழகத் தலைவர் ஸ்டாலின்  அவர்களின் வழியில் செயலாற்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்கு களம் அமைக்கும் வகையில், எழுச்சியோடு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துகள்”, என்று கூறினார். 

இதையும் படிக்க |  ” காரல் மார்க்ஸும் தனிமனித வளர்ச்சியில் தான் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அது வேறு விதத்தில்” - ஆளுநர் ரவி.