ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் உலகத்தர பயிற்சி தேவை

முன்னணி விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் உலகத்தர பயிற்சி தேவை

சென்னை தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில், உலகத் தரத்திலான பயிற்சி வழங்கிடவும், விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் வேண்டும் என்றும் அறிவுறுத்திய முதலமைச்சர், புதியதாக நடைமுறைப்படுத்த வேண்டிய விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

ஒவ்வொரு விளையாட்டிலும் திறமையும் ஆர்வமும் உள்ள கிராமப் புறத்தைச் சார்ந்த மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு, உறைவிடம் மற்றும் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதுடன், உயர் செயல்திறன் மிக்க பயிற்சி அளித்துப் பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய வழிவகைகள் குறித்தும் அவர் ஆலோசித்தார்.

சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் அதிக அளவில் பங்குபெற்றுப் பதக்கங்கள் வென்று இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலம் என்பதைப் பறைசாற்றுகின்ற வகையில் முன்னணி விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.