ஏரிக்கு நடுவே மின் கம்பத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள்... கடும் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்ட காவல்துறையினர்...

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே வெள்ளத்தில் சிக்கிய மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மூவரை காவல் துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

ஏரிக்கு நடுவே மின் கம்பத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள்... கடும் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்ட காவல்துறையினர்...

திருப்போரூர் அருகே தையூர் ஏரியில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரி நடுவில் உள்ள மின் கம்பத்தில் பணியாற்றுவதற்காக ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் பைபர் படகில் சென்றுள்ளனர்.

மூன்று பேர் கம்பத்தின் மேல் ஏறி நின்று பணியாற்றிக் கொண்டிருந்த போது திடீரென நீர் வரத்து அதிகரித்ததால், படகில் இருந்த மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூவரும், அங்கிருந்த மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தத்தளித்து வந்தனர்.  

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மரக்கிளையில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை கடும் போராட்டத்திற்கு பிறகு மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் ஏரியின் நடுவேயுள்ள மின்கம்பத்தில் சிக்கியிருந்த மற்ற 3 பேரையும் பத்திரமாக கரைக்குக் கொண்டு வந்தனர்.

பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் 6 பேரை, பத்திரமாக கரைக்கு கொண்டு வந்த காவல்துறையினருக்கு, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.