மாணவர்களுக்கான யோகா பயிற்சி முகாம்...! கலந்துகொண்ட அமைச்சர்..!

மாணவர்களுக்கான யோகா பயிற்சி முகாம்...! கலந்துகொண்ட அமைச்சர்..!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த சிற்பி திட்டத்தில் உள்ள 5000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி நிகழ்வு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். மகா யோகா குழுவை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது குழுவினர் 100 பேர், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்வு தமிழ்நாடு (young achivers) யங் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெகார்ட்ஸ் இல் இடம் பெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், யோகா பயிற்சி என்பது மனிதனை நல்வழி படுத்துவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும் , உடற்பயிற்சியும் யோகாசனமும் ஒரு மனிதனின் உடல் நலமாக பேணிக் காக்கவும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறினார். இதன் ஒரு பகுதியாக சிற்பி என்கிற திட்டத்தினை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் அதற்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டு இளம் தலைமுறைகளை பேணி காப்பதற்காக இதுபோன்ற திட்டங்களை அறிமுகம் செய்து இருப்பதாகவும் கூறினார்.

தான் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த போது கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட, தமிழகத்திலேயே முதல் முறையாக யோகா பயிற்சி முகாமினை தொடங்கியதாக தெரிவித்தார். யோகாவிற்காக சென்னையில் உள்ள நேரு பூங்கா , ஜீவா பூங்கா போன்ற 38 பூங்காவில் யோகாசனத்திற்கென தனியாக மேடை அமைத்து இருப்பதாக கூறினார்.  தொடர்ந்து அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் சென்னை  பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் ஆகியோர் மாணவர்களுக்கு யோகாசனம் செய்து  காட்டினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருகிற 9 ஆம் தேதி 200க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை கண்டுபிடித்து அவரவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்புவதற்கான முயற்சிகளில் தமிழக காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். சிற்பி திட்டம் முக்கிய நோக்கமாக இளைய சமுதாயத்தினரை ஒழுக்கமாக கொண்டு வருவதற்கும் போதை கலாச்சாரத்தில் இருந்து அவர்களை மீட்டு கொண்டு வருவதற்கும் இந்த திட்டம் வழிவகுக்கும் என அமைச்சர் கூறினார்.

பொதுநலத்தோடு  சிந்திப்பது, எவ்வாறு இயற்கையை பேணிக் காப்பது போன்ற சமூக சிந்தனைகளோடு  குழந்தைகளை வழி நடத்துவதற்காக இது போன்ற யோகா திட்டத்தினை உருவாக்கி உள்ளதாக கூறினார். மேலும் இந்த திட்டத்தினை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் வழிகாட்டுதலின் கீழ் சிறப்பாக நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக பெண் குழந்தைகள் நலனும் பேணி காக்க இது போன்ற யோகாசனப் பயிற்சிகள் உதவியாக இருக்கும் எனவும்  இன்று முதல் கட்டமாக 5000 மாணவ மாணவிகளை யோகாசன  திட்டத்தில் இணைத்துள்ளதாகவும் இன்று 5000 ஆக இருந்த மாணவ மாணவிகள் வரும் காலங்களில் ஐந்து லட்சம், ஐந்து கோடியாக மாறும் என அமைச்சர் தெரிவித்தார்.

பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தமிழ்நாடு சிறந்த ஒரு இடம் என இந்தியாவில் தேர்ந்தெடுத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இருப்பதாக கூறினார். தமிழக அரசாலும், தமிழக காவல்துறை அதிகாரிகளாலும் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பான செயல்களால் இது போன்று அந்தஸ்துகள் தமிழகத்திற்கு கிடைத்து உள்ளது. 2300 செவிலியர்களுக்கும் மீண்டும் பணி அமர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் தற்போது அவர்கள் ஊதியமாக வாங்கி  கொண்டிருக்கும் 14,000 ஆக இருந்து வருகிறது. மீண்டும் அவர்களை பணியில்  அமர்த்தும் போது அவர்களுக்கு 18,000 ரூபாயாக அதிகரித்து இருக்கும் என அமைச்சர் மா சுப்பிரமணியன்  தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் செவிலியர்களின் சான்றிதழ்கள் கோப்புகளை, இன்று காலை 11 மணி அளவில் இருந்து சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்று சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் அவர்களை நேரில் சந்தித்து இதற்கான  தீர்வுகளை அவர்களுடன் ஆலோசித்து பேச இருப்பதாகவும் கூறினார்.