"தமிழ்நாடு, கஞ்சா நாடாக மாறி வருகிறது" பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!!

"தமிழ்நாடு, கஞ்சா நாடாக மாறி வருகிறது" பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்!!

செங்கல்பட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் மது மற்றும் கஞ்சாவிற்கு அடிமையானதால் தான், கொலைக் குற்றங்களில் ஈடுபடும் கூலிப்படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் காட்டூர் காளிதாஸ், பூக்கடை நாகராஜ், அனுமந்தபுரம் தர்காஸ் மனோகர் ஆகிய 3 பேர் படுகொலை கண்டித்து பாமக சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக அரசுக்கு எதிராகவும், சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் எனக் கூறி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, "இந்த கொலை சம்பவங்கள் நடைபெற முக்கிய காரணம் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தான். மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி அவர்களே,  நீங்கள் மதுவிலக்கு துறை அமைச்சரா ? . காவல்துறையினர் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். உங்களால் முடியவில்லை என சொன்னால் எங்க தம்பிகள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம். என் தம்பிகளிடம் சொல்ல கூட வேண்டாம், கண் அசைத்தால் போதும். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன்.  நம்மை குறி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என பாமகவினர் மத்தியில் கோவம் இருக்கிறது. அந்தக் கோபம் வெடிப்பதற்கு முன்னால் நடவடிக்கை எடுங்கள். இல்லையெனில், நான் சொன்னாலும் என் தம்பிகள் அதன் பிறகு கேட்க மாட்டார்கள்" என ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

மேலும், "பாமக நிர்வாகிகள் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை, முதலமைச்சரின் கீழ் இயங்கும் காவல்துறை, இந்த கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். தமிழ்நாட்டில் இந்த கூலிப்படை கலாச்சாரம் திடீரென வந்ததில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக பெருகி, இப்பொழுது உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டது யார்? இந்த கொலை சம்பவங்களில் ஈடுபட, ஏவி விட்டது யார்? என்பது குறித்து காவல்துறையினுக்குள் தெரியும். ஆனால் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மிகுந்த  வேதனைக்குரியது. இதுபோன்ற கொலை குற்றங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலைச் சம்பவத்திற்கும் கூலிப்படை அதிகரிப்பதற்கும் முக்கிய காரணமாக கஞ்சா மற்றும் மது இருந்து வருகிறது. தமிழ்நாடு கஞ்சா நாடக மாறி வருகிறது" என குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: பறக்கும் ரயில்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த குழு நியமனம்!!

மேலும், கூலிப்பட கலாச்சாரத்தை ஒழிக்க சிறப்பு கவனம் செலுத்தி இதை ஒழிக்க வேண்டும். உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற கூலி படை கலாச்சாரம் ஒழிப்பு போன்று தமிழ்நாட்டிலும், இந்த கூலிப்படையை வேரோடு அறுக்க வேண்டும். தயவு தட்சனை பார்க்கக்கூடாது, கூலிப்படையில் இருப்பவர்கள் அனைவரும் 16 ,17 வயது உடையவர்கள் தான். மீசை கூட முளைக்கவில்லை. நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், கூட வெடிகுண்டு வீசுகிறார்கள் . நேற்று கூட பாமக நிர்வாகி ஒருவர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது", என கடிந்துரைத்துள்ளார்.

மேலும், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் திட்டமிட்டு நடைபெறும் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. அதே போன்று சட்டங்களை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும்.  செங்கல்பட்டில் நடைபெற்றது அடையாள ஆர்ப்பாட்டம் தான், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை என்றால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்  என அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பாட்டிலுக்கு 10ரூ கூடுதல் என தட்டிக்கேட்ட மதுபிரியர்...கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்!!