'தென்னந்தோப்பில் தஞ்சம் அடைந்த அரிக்கொம்பன்' பிடிக்குமா வனத்துறை!

'தென்னந்தோப்பில் தஞ்சம் அடைந்த அரிக்கொம்பன்' பிடிக்குமா வனத்துறை!

கம்பம் அருகே காமயகவுண்டன் பட்டியில் அரி கொம்பன் யானை தென்னந்தோப்பில் தஞ்சம் அடைந்திருப்பதால் விவசாயிகள் பணிகளுக்கு செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி, கூத்தநாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள கோடை வயல் என்ற பகுதியில்  தனியாருக்கு சொந்தமான தென்னை தோப்பில் நேற்று இரவு ஒரு மணி முதல் அரிக்கொம்பன் யானை தஞ்சமடைந்துள்ளது. அதனை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து வனத்துறையினர் அரிக் கொம்பன் யானை தஞ்சம் அடைந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் யானை நிற்கும் இடம் வனப்பகுதிக்கு அருகில் இருப்பதால் யானை வனப்பகுதிக்குள் செல்லுமா? அல்லது விளைநிலப் பகுதிகளுக்குள் மீண்டும் இறங்குமா? என வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அந்தப் பகுதியில் குடியிருக்கும் தோட்ட தொழிலாளர்களிடம் யாரும் பணிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அங்கு குடியிருப்பவர்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியதுடன் பணிக்கு வரும் தொழிலாளர்களையும் தோட்டத்து உரிமையாளர்களையும் பணிக்கு செல்ல விடாமல் நடுவழிலேயே திருப்பி அனுப்புகின்றனர்.

இதன் காரணமாக தோட்ட வேலை பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்களது பணிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் ஒவ்வொரு பகுதியாக அரிக்கொம்பன் யானை இடம் பெயர்ந்து வருகிறான். இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாயிகளை பணி செய்ய விடாமல் வனத்துறையினர் தடை போட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அரி கொம்பனை பிடிக்க கும்கி யானைகள், மயக்க ஊசி சகிதமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வனத்துறையினர் கம்பம் வந்துள்ளனர். கும்கி யானைகளான சுயம்பு, உதயன் மற்றும் அரிசி ராஜா என்கிற முத்து ஆகிய மூன்று கும்கி யானைகளை கம்பம் நகரில் கொண்டு வந்து விட்டனர்.

இந்த மூன்று கும்கி யானைகளை பார்ப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வருகின்றனர். மூன்று யானைகளை ஓரிடத்தில் காண்பதற்காக குடும்பத்துடன் ஏராளமான பொதுமக்களின் கூட்டம் அந்தப் பகுதியில் அலை மோதுகிறது. மேலும் காவல்துறையினர் தடைவிதித்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து கூடுவதால் கும்கி யானைகளுக்கு தொந்தரவு ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் பொதுமக்கள் அப்பகுதிக்கு தடை விதித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!