ஆவடியில் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை பாதிப்பு!

திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

ஆவடியை அடுத்து அண்ணனூர் பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 9 பெட்டிகளைக் கொண்ட மின்சார ரயில் பயணிகள் இல்லாமல் காலை 5.40 மணி அளவில் ஆவடி 3வது நடைமேடைக்கு வந்தது. அப்போது மின்சார ரயில் ஓட்டுநர் திடீரென சுயநினைவை இழந்ததால் சிக்னலை கடந்து 200 மீட்டர் தொலைவில், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் இருப்புப்பதையில், ரயில் தடம் புரண்டது. ரயிலில் பயணிகள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனால் அரக்கோணத்தில் இருந்து  சென்னை செல்லும் அனைத்து விரைவு வண்டிகளும் மின்சார வண்டிகளும் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக சென்றதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

மேலும் ரயில்வே பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் உடனடியாக சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு சுமார் சரி செய்ய 5 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.