கரூரில், அறுத்து வீசப்பட்ட பாஜக கொடி!

கரூரில், அறுத்து வீசப்பட்ட பாஜக கொடி!

கரூர்: கரூரில், பாஜக கட்சியின் கொடியை அறுத்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய மின்சாரம், மதுவிலக்கு ஆய தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்ததாக அமலாக்க துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் அமலாக்க துறையினர் சோதனை செய்து நிலையில் இன்று அதிகாலை அவரை கைது செய்து உள்ளனர்.

இதனை அடுத்து கரூர் மாவட்டம் முழுவதும் பாஜக அலுவலகங்கள் அருகே போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் உள்ள பாஜகவின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடியினை திமுகவினர் அறுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கு குவிந்த குளித்தலை நகர பாஜகவினர் கொடியினை அறுத்த திமுக பிரமுகர் மருதூர் சம்பத்தினை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர்.

அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குளித்தலை நகர பாஜக தலைவர் கணேசன் தலைமையிலான பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்

குளித்தலை நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையத்தில் பாஜக கொடி கம்பத்தில் இருந்த கொடி அறுக்கப்பட்ட சம்பவத்தினால் தற்போது இங்கே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது