வாகன சோதனை சாவடியில் கஞ்சா கடத்தல்...! ஏழு பேர் கைது...!

வாகன சோதனை சாவடியில் கஞ்சா கடத்தல்...! ஏழு பேர் கைது...!
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில், ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
 
ஆவடி காவல் ஆணையர் உத்தரவின் பேரில் செங்குன்றம் துணை ஆணையாளர் மணிவண்ணன் அறிவுரைப்படி, செங்குன்றம் உதவி ஆணையாளர் முருகேசன் மேற்பார்வையில் செங்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாடியநல்லூர் வாகன சோதனை சாவடியில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் செங்குன்றம் காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் அசோக், பயிற்சி உதவி ஆய்வாளர் விக்னேஷ், தலைமை காவலர் மற்றும் போலீசாருடன் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக செங்குன்றம் வந்த இரண்டு கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த இரண்டு காரையும் அதனுள் இருந்த ஏழு பேரையும்  காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது  அவர்கள் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மாரிராஜ்பாபு (32), புகாரி ராஜ்பாபு (26), பட்டிபிரபாகர் (28), குடா கிஷோர் குமார் (28), அனுகுர்செவுரிமேஸ் (32), அனுகுரிகொண்டபாபு (26), திப்புர ரமேஷ்பாபு (26)  என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் 7 ஏழு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
 
மேலும் ஆவடி காவல் ஆணையத்தின் கீழ் இந்த சோதனை முதலாவதாக நடத்தப்பட்டதால் போலீசாரின் நடவடிக்கையில் சென்னையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கஞ்சா விற்பனை தடுக்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆவடி துணை காவல் ஆணையாளர் மணிவண்ணன், இது போன்ற குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தொடரும் எனவும் இதில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறினார். மேலும் குற்றவாளிகளின் வங்கி கணக்கும் முடக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் சோதனை சாவடியில் விழிப்புடன் பணிகள் இருந்து வாகன சோதனை செய்து கஞ்சாவை கைப்பற்றிய காவலர்களை ஆவடி காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்